இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்ஸா, ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றங்கள் தொடர்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளை மறைமுகமாகவோ நேரடியாகவோ மீறியமை அல்லது மற்றவர்கள் அவற்றை மீறுமாறு ஊக்குவித்தமை, ஊழலில் ஈடுபடுமாறு வந்த அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை மறைத்தமை மற்றும் போட்டி முடிவுகளை மாற்றுதல் அல்லது அதில் செல்வாக்கு செலுத்த இணங்கியமை ஆகிய மூன்று அம்சங்களிலே Anti-Corruption Tribunal-ஆல் அவர் குற்றவாளி என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சொய்ஸாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் எனவும் எதிர்வரும் நாட்களில் அவருக்கான மேலதிக தடைகள் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
கடந்த 2018 நவம்பரில் ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நுவான் சொய்ஸா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
