மும்பாயில் திடீர் மரணமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டீன் ஜோன்ஸின் சடலம் மெல்பேர்னுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், கொரோனா கால கட்டுப்பாடுக்கு ஏற்ப, அவரது இறுதி நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று விக்டோரிய Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளுக்கான நேர்முக வர்ணனையாளராக பணியாற்றுவதற்கு இந்தியா சென்றிருந்த டீன் ஜோன்ஸ் நேற்றைய தினம் மாரடைப்பினால் மரணமானார். அவர் பணிபுரியும் Star Sports நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டிருந்தது.
நேற்று மாலை, டீன் ஜோன்ஸ் தங்கியிருந்த South Mumbai - Trident ஹோட்டலில், தன்னுடைய சகாவும் நேர்முக வர்ணனையளிப்பதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சென்றிருந்த இன்னொருவருமான ப்ரெட் லீயுடன் நடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென்று மூர்ச்சையாகி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசமளித்த ப்ரட் லீ, அவசர சிகிச்சைப்பிரிவினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, டீன் ஜோன்ஸ் அம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்டபோது அவருக்கு சுவாசம் இருந்தது என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இறக்கும்போது டீன் ஜோன்ஸிற்கு வயது 59.
80 - 90 காலப்பகுதியில் ஒருநாள் போட்டிகளில் நட்சத்திர வீரராக வலம்வந்த டீன் ஜோன்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய காலப்பகுதியில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். 52 டெஸ்ட் போட்டிகளிலும் 164 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி 18 சதங்களையும் 60 அரைச்சதங்களையும் அடித்தவர்.
டீன் ஜோன்ஸின் மரணத்தினால் அதிர்ச்சியடைந்துள்ள உலகெங்கிலுமுள்ள முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் தங்களது ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துவருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் டீன் ஜோன்ஸின் மறைவு தேசிய அளவில் பெருந்துயராக பகிரப்பட்டுவருகிறது. அவரது குடும்பத்துக்கு ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்துவருகிறார்கள்.
Star Sports நிறுவனம் டீன் ஜோன்ஸின் மறைவினை அடுத்து, உடனடியாக ஆஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்புகொண்டு அவரது சடலத்தை மெல்பேர்னுக்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
இன்றைய தினம் தனது நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் டீன் ஜோன்ஸின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த விக்டோரிய Premier Daniel Andrews, கொரோனா கட்டுப்பாடுகள் டீன் ஜோன்ஸின் இறுதி நிகழ்வில் நேரடியாக பாதிப்பினை செலுத்தும் என்பது கவலைக்குரியது. ஆனால், இறுதிநிகழ்வு ஒழுங்குசெய்யப்படும் தினத்தில் விக்டோரியாவில் நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளின்பிரகாரம், அதில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை மற்றும் ஒழுங்குகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
