மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியா கொண்டுவரப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் இருநூறு அகதிகளில் முதல்முறையாக இருவர் விசா வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளதாக ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருவர் கடந்த திங்கட் கிழமை பிறிஸ்பன் கங்காரு ஹோட்டலில் இருந்தும் இன்னொருவர் கடந்த புதன்கிழமை மாலை மெல்பேர்ன் குடிவரவு திணைக்கள இடைத்தங்கல் முகாமிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த அகதிகளுக்கு எதிராக அரசாங்கம் கடைப்பிடித்துவரும் கடும்நிலைப்பாட்டுக்கு எதிரான பெருவெற்றி இது என்று இவர்கள் சார்பில் வழக்கு நடத்திவரும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பிறிஸ்பனில் விடுதலை செய்யப்பட்டவர் 2019 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து தொடர்ச்சியாக தடுப்பில் வைக்கப்பட்டிருந்தவர் என்றும் மற்றையவர் 2019 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறிஸ்பனில் விடுவிக்கப்பட்ட அகதி, தன்னை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னதாக விசா வழங்கி விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
அவரது வழக்கில் தோற்றுவிடக்கூடாது என்ற அச்சத்திலேயே அரசு இந்த விடுதலையை செய்திருக்கிறது என்று அவர் சார்பிலான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மனுஸ் - நவுறு தீவுகளிலுள்ள அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கத்தில் கடும் எதிர்ப்பினை மீறி எதிர்க்கட்சிகள் நிறைவேற்றிய சட்டத்தின் பிரகாரம், ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 200 அகதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல், குடிவரவுத்திணைக்களத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
