நவுறுவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் 24 புகலிடக்கோரிக்கையாளர்கள் மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அழைத்துவரப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள், டார்வின் மற்றும் நியூ சவுத்வேல்ஸின் விலவூட் அகதிகள் முகாம்களில் தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் - கடந்த செப்ரெம்பர் மாதம் - இவ்வாறு டார்வினுக்கு மருத்துவ காரணங்களுக்காக கொண்டுவரப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் இன்னமும் எந்த மருத்துவ சோதனைக்கும் கொண்டுசெல்லப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்றும் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளவர்கள் ஊடகங்களுடன் பேசுவதற்கு மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார்கள் என்றும் The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
நவுறு - மனுஸ் தீவுகளிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தும்படி தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட்டுவரும் நிலையில், மேற்படி புகலிடக்கோரிக்கையாளர்கள் மிகவும் இரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் - ஆஸ்திரேலியாவுக்கான அவர்களது வருகை தற்காலிகமானது என்றும் மருத்துவக்காரணங்களுக்கானது மாத்திரமே என்றும் நிபந்தனைகள் விதித்து கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
நவுறு-மனுஸ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்படுவதை இலகுவாக்கிய Medevac சட்டத்தை அரசு மீளப்பெற்றுவிட்ட பின்னணியில் குறித்த 24 அகதிகளும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
