சிட்னி St Patrick’s Marist College, Dundas-இல் கல்விகற்கும் இரு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளது.
அதேநேரம் Willoughby Girls High School-இல் கல்விகற்கும் மாணவி கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இப்பாடசாலையும் மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வாரம் Epping ஆண்கள் உயர்தர பாடசாலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்பதை எட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரேனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து, கன்பராவிற்குள் கொரோனா நுழைந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் சுகாதாரத்துறை வட்டாரங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவியுள்ள கொரேனா வைரஸ், தலைநகர் கன்பராவிற்குள் இன்னும் யாருக்கும் தொற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
ஆனால், நேற்றைய தினம் சுகாதார அமைச்சு அறிவித்தபடி, சிட்னியிலிருந்து கன்பராவுக்கு வந்து சென்ற பாதுகாப்பு அமைச்சு உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது, இவர்கள் கன்பராவில் யார் யாரை சந்தித்தார்கள் என்பதும் குறித்து ஆராய்ந்துவரும் சுகாதார வட்டாரங்கள், அவர்களை கண்காணிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்த இரு உத்தியோகத்தர்களும் கன்பராவில் நாடாளுமன்ற அதிகாரிகள் உட்பட பல உயர்மட்ட பிரிதிநிதிகளை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க சுகாதரத்துறையிலும் முதியோர் இல்லங்களிலும் பணிபுரிபவர்களுக்கு விநியோகிப்பதற்கு அரசு சுமார் ஐந்தரை கோடி முகக்கவசங்களை கொள்முதல் செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த முகக்கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் மருத்துவ பதற்ற நிலையின்போது முன்னிலையில் நின்று பணிபுரிகின்றவர்களை பாதுகாப்பது அரசின் கடமை என்று தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் Greg Hunt , தாங்கள் கொள்முதல் செய்துள்ள முகக்கவசங்கள் ஏப்ரல் மாத இறுதியில் கிடைக்கப்பெற்றதும் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் பணிபுரிபவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையானது அனைவராலும் ஒருமித்து நின்று முறியடிக்கப்படவேண்டியது என்று கூறியுள்ள சுகாதர அமைச்சர், காட்டுத்தீ அனர்த்தத்தினை முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் எவ்வாறு ஒற்றுமையுடள் செயற்பட்டார்களோ அதே உறுதிப்பாடு தற்போதும் தேவை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆஸ்திரேலிய பங்குச் சந்தை இன்று பாரிய சரிவை- குறிப்பாக 140 பில்லியன் இழப்பை எதிர்கொண்டுள்ளது.
Share
