சீனா தனது சொந்த நாட்டு மக்கள் ஒரு மில்லியன் பேரை இரகசிய முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது என்று தமக்கு கிடைத்த நம்பகரமான அறிக்கைகளை ஆதாரம் காண்பித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் சுயாட்சியுடன் வாழுகின்ற உய்கர் பிராந்தியத்தை சீன அரசாங்கம் இரகசிய சிறைச்சாலையாக பேணிவருவதாகவும், மதத்தீவிரவாதம் தலைதூக்கக்கூடாது என்பதற்காகவும், சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுப்பதாக கூறிக்கொண்டு மிகப்பெரிய மனித உரிமைகள் மறுப்பினை மேற்கொண்டுவருவதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி சீன அரசாங்கம் உய்கர் பிராந்தியத்தை சேர்ந்த சமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களை இரகசிய முகாம்களில் தடுத்துவைத்திருப்பதாகவும், மேலும் பலரை அரசியல் மற்று கலாச்சார காரணங்களுக்காக கைது செய்து மீள் கல்விக்கு உட்படுத்துவதாக கூறி தடுத்துவைத்திருப்பதாகவும் ஐ.நா. அமைப்பு கூறுகிறது.
மேலும் -சீன அரசு, சிறுபான்மை முஸ்லிம் மக்கள் தங்களது மதத்தை பின்பற்றுகின்ற ஒரே காரணத்துக்காக அவர்களை மர்மமான முறையில் தடுப்புக்கு கொண்டு செல்கிறது. இவ்வாறு காணாமல் போகின்றவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கே எதுவும் தெரியவில்லை. உய்கர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நூறு மாணவர்கள் வெளிநாட்டில் மேற்படிப்பை முடித்துவிட்டு நாடுதிரும்பிய நிலையில் அவர்களும் காணாமல்போயுள்ளார்கள் - என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
