ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைய ஒரு காரணம் தேவை என்ற நிலையில் 2014 இல் உக்ரைனிலிருந்து பிரிந்து, தங்களைச் சுயாதீன குடியரசுகளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் Donetsk டொன்ஸ்க் மற்றும் Luhansk லுஹான்ஸ்க் பகுதிகளை உக்ரைன் மீண்டும் கைப்பற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் ஆகவே அங்கு அமைதியை நிலைநாட்ட தமது படைகள் அங்கு சென்றிருப்பதாகவும் ரஷ்யா கூறுகிறது.
உக்ரைன் படைகள் அங்கு மக்களைக் கொன்று குவிப்பதாகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டுகிறது. ரஷ்ய இராணுவம் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிக்குள் அமைதிகாக்க செல்வதற்கான அனுமதியை ரஷ்ய பாராளுமன்றத்தின் பாதுகாப்புச் சபை பியுட்டினுக்கு வழங்கியிருக்கிறது.

Donetsk மற்றும் Luhansk குடியரசுகளை மாஸ்கோ திடீரென்று அங்கீகரித்திருப்பதன் காரணமாகவும் அங்கு தமது படைகளை அமைதிகாக்கும் நோக்கத்துடன் தாம் அனுப்பியிருப்பதாக ரஷ்யா இப்போது கூறிக்கொண்டுள்ள நிலையிலும், ரஷ்யா உக்ரைன் மண்ணில் கால் பதித்திருப்பதாலும், ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தக்கூடிய சாத்தியம் அதிகரித்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகள் 2014 இல் உக்ரைனிலிருந்து பிரிந்து தனிநாடுகளாகப் பிரியும் நிலை ஏன் ஏற்பட்டது என்பதை நாம் பார்ப்போம்.
டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகள் உக்ரைனின் தென்கிழக்கில் ரஷ்ய எல்லைக்கு அருகாமையில் இருக்கும் பகுதிகளாகும். இந்த இரு பகுதிகளும் சுயமாக சுதந்திரப்பிரகடனம் செய்து 2014 இல் உக்ரைனிலிருந்து பிரிந்த போதும் ஓரிரண்டு நாடுகளைத்தவிர - கியூபா, வெனிசுவேலா, நிக்கரகுவா, சிரியா ஆகிய நாடுகளைத்தவிர, ரஷ்யா உட்பட இவற்றை சுதந்திர நாடுகளாக இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்த இரு நாடுகளிலும் சுமார் 3 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். முழுமையாக ரஷ்ய மொழியே இங்கு பேசப்படுகிறது.

2014 இல் கிரிமியாவை (Crimea) ரஷ்யா ஆக்ரமித்த பின்னர் அப்போது உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் செயல்பட்ட ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் அங்குள்ள உள்ளூராட்சி மற்றும் அரச நிர்வாக அமைப்புக்களின் அதிகாரங்களைக் கைப்பற்றியதோடு சுதந்திர சுயாட்சி பிரகடனத்தையும் வெளியிட்டார்கள். ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்பட்டுவந்த உக்ரைன் அதிபர் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் 2014 ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னர் ரஷ்யா, டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளுக்கு நிதி, மனிதாபிமான மற்றும் இராணுவ உதவிகளைச் செய்து அவற்றைத் தனது பிடியில் பகடைக்காய்களாக வைத்திருக்கிறது.
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்னெடுத்த Minsk agreement என்ற சமாதான ஒப்பந்தத்தின் பலனாக உக்ரைனுக்கும் இந்த நாடுகளுக்குமிடையே பாதுகாப்பு வலயம் ஒன்று அமுலில் இருக்கின்ற போதும் நாளடைவில் இவை உக்ரைனுக்குச் சொந்தமான நிலப்பரப்பு என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதே இந்த சமாதான ஒப்பந்தத்தின் நோக்கமாகும். ஆனால் ரஷ்யா, கடந்த எட்டு ஆண்டுகளாக பிரிவினைவாதிகளுக்கு ஆயுத உதவிகளை வழங்கிவந்துள்ளதோடு சுமார் 8 லட்சம் பேருக்கு ரஷ்ய passports -கடவுச்சீட்டுக்களையும் வழங்கியுள்ளது. 13.5 மீட்டர் உயரமான லெனின் சிலை டொன்ஸ்க் சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. 1930 களில் சோவியத் யூனியனில் நிலவிய அடக்குமுறைகளும் தண்டனைகளும் இப்போதும் அங்குள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யா இந்த இரு பிரதேசங்களையும் இதுவரை அங்கீகரிக்காமல் இப்போது அங்கீகரித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
- ஒன்று: ரஷ்யா டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளை அங்கீகரித்திருப்பதன்காரணமாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அனுசரனையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட Minsk Agreement மின்ஸ்க் ஒப்பந்தம் செல்லுபடியாமற் போவதால் அந்த ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளை ரஷ்யா இனிமேலும் பின்பற்றத்தேவையில்லை; அதை மீற முடியும்.
பேச்சுவார்த்தைகளின் மூலமாக தற்போதைய பிரச்சனையத் தீர்த்துக்கொள்ள முற்படும் போது ரஷ்யாவின் கை ஓங்கியிருக்கும் நிலை உருவாகும் என்பது.
- இரண்டாவது : இந்த இரண்டு குடியரசுகளும் தனிநாடுகள், அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் என்ற முறையில் அவற்றின் அழைப்பின் பேரில்அங்கு தமது இராணுவம் நுழைந்ததை ரஷ்யா நியாயப்படுத்தமுடியும். இதை அத்துமீறல் என்று வகைப்படுத்த முடியாது.
இந்த இரண்டு காரணங்களுக்காகவே ரஷ்யா சடுதியாக இந்த குடியரசுகளை அங்கீகரித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அத்தோடு ‘டொன்ஸ்க் மற்றும் லுஹானஸ்க் பகுதிகளில் இருந்து ரஷ்ய இராணுவம் வெளியேறவேண்டும்; அப்பகுதிகள் மீண்டும் உக்ரனின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும்’ என்று உக்ரைனும் மேற்கு நாடுகளும் பேச்சுவார்தைகளின்போது நிர்பந்தம் செய்தால் ரஷ்யா தனது பிரதான கோரிக்கையாகிய - ‘உக்ரைன் NATO வில் இணையக்கூடாது; ரஷ்யாவுக்கு அயலில் உள்ள NATO உறுப்பு நாடுகளுக்கும் NATO ஆயுத உதவி செய்க்கூடாது’ என்ற நிபந்தனைகளை வலியுறுத்த முடியும்.
டன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் முழுமையாக பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்றபோதும் தற்போது ரஷ்யா அந்த குடியரசுகளை அங்கீகரித்திருப்பதால் அப்பகுதிகள் முழுமையாக பிரவினைவாதிகளுக்குச் சொந்தமானது என்பது ரஷ்யாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இதை மேற்கு நாடுகள் குறிப்பாக உக்ரைன் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
ரஷ்யாவுக்கெதிரான கடுமையான பொருளாதாரத்தடைகளை அமுல்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மேற்குலக நாடுகள் தெரிவித்திருக்கின்றன. Nord stream 2 என்ற 10 பில்லியன் டொலர் மூலதனத்தில் அமைக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் விநியோக குழாய் அமைப்பை மூடுவதாக ஜெர்மனிய அதிபர் Olaf Scholz அறிவித்திருக்கிறார். அதிபர் பியுட்டின் தப்புக்கணக்கு போட்டுவிட்டார் என்று பிரிட்டிஷ் பிரதமர் Boris Johnson கூறியிருக்கிறார். பிரிட்டனிலுள்ள ஐந்து ரஷ்ய வங்கிகளை முடக்கப்போவதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் NATO அமைப்பு என்பனவும் பொருளாதாரத்தடைகள் பற்றியே அதிகம் பேசி வருகின்றன.

இராணுவத்தை அனுப்புவது அல்லது இராணுவத்தளபாடங்களை அனுப்புவதுபற்றி இதுவரை மேற்குலகநாடுகள் குறிப்பிடவில்லை. ஆனால் அண்டை நாடுகளான Estonia, Latvia, Lithuania, Poland, Romania, Bulgaria ஆகிய நாடுகளில் சுமார் 8000 NATO துருப்புகளும் 7000 அமெரிக்கத்துருப்புகளும் நிலைகொண்டுள்ளன.
‘ஆக்ரமிப்பு தொடங்கிவிட்டது; ரஷ்யாவின்இந்த செயல் ஒரு போர்ப்பிரகடனமாகும்’ என்று, European Commissioner for Justice, Didier Reynders மற்றும் பிரிட்டிஷ் நலத்துறை அமைச்சர் Sajid Javid ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய யூனியினில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாரிஸில் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தைகளின்பின்னர் ரஷ்யா மீது பொருளாதாரத்தடைகளை அறிவிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
ரஷ்யாவின் வங்கி அமைப்பிற்கும், international swift payment system என்ற அமைப்பிற்கும் இடையே இருக்கும் இணைப்பை துண்டிப்பதன் மூலமாக பாரிய பொருளாதாரத்தடையை விதிக்கமுடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. ஆனால் இதனால் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமிடையே முழு அளவிளான போர் ஒன்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இதுபற்றி இரண்டுவிதமான கருத்துக்கள் உலவுகின்றன.
‘டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளை அங்கீகரித்து ரஷ்ய இராணுவம் அங்கு நுழைவதன் மூலமாக Minsk ஒப்பந்தத்தை செயலிழக்கச்செய்வதே ரஷ்யாவின் நோக்கம்; ஆகவே ரஷ்யாவுக்கு ஏற்கனவே வெற்றி கிடைத்துவிட்டது’ என்பது ஒரு கருத்து.
‘இல்லை. உக்ரைனின் தலைநகராகிய Kyiv ஐக் கைப்பற்றும்வரை ரஷ்யா ஓயாது’ என்பது மற்றைய கருத்து. உக்ரைன் இராணுவம் தயார் நிலையில் இருப்பதால் ரஷ்யா Kyiv வரை உடனடியாக முன்னேறுவது எளிதல்ல என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அங்கு முழுமையான போர்மூழும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது என்பதால் மேற்குலக நாடுகள் தமது குடிமக்களை அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்திவருகின்றன. தூதரக ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
