ஆஸ்திரேலியாவின் உள்ளூர் நகரங்களுக்கு விமானப் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு கடுமையான பாதுகாப்பு பரிசோதனை இருப்பதில்லை. ஆனால் இந்த முறையை மாற்றி உள்ளூர் நகரங்களுக்கு விமானப் பயணம் செய்யும்போதும் சர்வதேச பயணிகள் எதிர்கொள்வது போன்ற கடுமையான பாதுகாப்பு பரிசோதனையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது விமானத்தில் குண்டுவைக்க திட்டமிட்டதான சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்ட பின்னணியில் உள்ளூர் பயணம் மேற்கொள்ளும் விமான நிலையங்களிலும் கடுமையான பாதுகாப்பு பரிசோதனை முறைகளை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
பல வெளிநாடுகளில் உள்ளூர் பயணம் மேற்கொள்ளும் விமான நிலையங்களிலும் கடுமையான பாதுகாப்பு பரிசோதனை முறை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் ஆஸ்திரேலியாவும் இதுபோன்று செய்வது தேவை என்று விமானப்பயண பாதுகாப்பு தொடர்பான வல்லுனர்கள் கூறுகின்றனர்.
புதிய பாதுகாப்பு நடைமுறை எப்போது நடைமுறைக்கு வரும் என்று அரசு விரைவில் அறிவிக்கும் என்றும், புதிய நடைமுறைக்கு அதிக செலவாகும் என்பதால் உள்ளூர் விமான கட்டணம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
