பூர்வீக மக்களின் புனித இடமாக கருதப்படும் Uluru-உலுறு மலையில் ஏறுவதற்கு, 2019ம் ஆண்டு அக்டோபர் முதல் தடை விதிக்கப்படவுள்ளது.
உலுறு மலையை ஒரு தேசிய பூங்காவாகப் பார்ப்பது தவறு என்றும், இது பல கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கிய இடமென்பதால் இதனைப் பாதுகாப்பது அவசியமெனவும் இம்மலையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆஸ்திரேலியாவில், காற்றரிப்பிற்குள்ளாகியும் கடும் வெயிலால் தாக்கப்பட்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனிக் குன்றாக இருக்கும் உலுறு மலை, உலகின் மிகப்பெரிய monolith எனப்படும் தனிக்குன்றுகளில் இரண்டாவது இடத்தில் இன்றும் இருக்கிறது.
உலுறு பல்லாயிரம் வருடங்களாக பல்வேறு பூர்வீக மக்கள் சமூகங்களும் சந்திக்கும் இடமாக, புனித இடமாக இருந்து வரும் நிலையில், 1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள், ஆஸ்திரேலிய அரசு உலுறு மலையின் உரிமையை, பிட்டஞ்சட்சரா இடத்திலுள்ள அனங்கு மக்களுக்குத் திருப்பிக் கொடுத்தது.
இதையடுத்து தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை, 99 வருடங்களுக்கு அதை குத்தகைக்குக்கு எடுத்து அனங்கு மக்களுடன் கூட்டாக அந்த இடத்தை நிர்வகித்து வருகிறது.
இந்தநிலையில் குறித்த மலை அதன் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுத்த 34வது ஆண்டு நிறைவு நாளான 2019 அக்டோபர் 26ம் திகதியுடன் இதில் ஏறுவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
