அகதி குடும்பங்களை காலவரையறையின்றி பிரிக்கும் ஆஸ்திரேலிய அரசின் செயற்பாடு தொடர்பில் தமது கண்டனத்தை பதிவு செய்வதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
30 வயதான திலீபன் ஞானேஷ்வரன் என்ற புகலிடக்கோரிக்கையாளரின் அகதி தஞ்சகோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் 11 மாத பெண் குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ள சம்பவத்தை UNHCR-ஐ.நா சபையின் அகதிகளுக்கான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
திலீபனின் மனைவி அகதி என இனங்காணப்பட்டு அவருக்கு SHEV விசா வழங்கப்பட்டுள்ளநிலையில், அவரது குடும்பத்தை இவ்வாறு காலவரையறையின்றி பிரிப்பது குடும்ப ஒற்றுமைக்கான அடிப்படை உரிமையையும், குழந்தையின் நலன்களுக்கான அடிப்படை கோட்பாடுகளையும் மீறும் செயல் என UNHCR அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை திலீபனை நாடுகடத்துவதற்கான உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டவுடன் அதனைத் தடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசிடம் தாம் கோரியிருந்ததாகவும், ஆனால் தமது கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை என்றும் UNHCR கூறியுள்ளது.
புகலிடம்கோரி தனித்தனியாக ஆஸ்திரேலியா வந்த திலீபனும் கார்த்திகாவும் கடந்த 2016இல் திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட அதேநேரம் கடந்த வருடம் இவர்களுக்கு பெண்குழந்தை பிறந்திருந்தது.
கடந்த வாரம் கார்த்திகாவுக்கும் மகளுக்கும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் வாழ்வதற்கு ஏதுவாக SHEV விசா வழங்கப்பட்டுள்ள பின்னணியில் திலீபன் நேற்றுமுன்தினம் நாடுகடத்தப்பட்டிருந்தார்.
கார்த்திகாவிற்கு வழங்கப்பட்டுள்ள விசாவின் கீழ் அவர் இலங்கைக்கு சென்று திலீபனைப் பார்க்க முடியாது என்பதுடன் தனது கணவனை இங்கே வரவழைக்கவும் முடியாது என்பதால் இக்குடும்பம் காலவரையறையற்ற பிரிவினை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
