ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வந்து நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேல் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வந்த சிறுவன், ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டுள்ளார்.
தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் கடந்த நான்கு வருடங்களாக நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 12 வயதான ஈரான் பின்னணி கொண்ட சிறுவனே இவ்வாறு ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட சிறுவனின் குடும்பத்தினர் அமெரிக்காவில் குடியேறுவதற்காக அனுப்பப்பட்டுவருகின்றவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அதிலும் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும், ஈரான் தஞ்சக்கோரிக்கையாளர்கள் பெரும்பாலானவர்களின் கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் கடந்த 2 வாரங்களுக்கு மேல் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்ட இச்சிறுவனின் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், அவனை இந்த நிலையிலும்கூட ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்து மருத்துவ வசதிகள் அளிப்பதற்கு குடிவரவுத்துறை மறுத்துவருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தநிலையில், குறித்த சிறுவன் இன்று தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் ஆஸ்திரேலியா அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வந்த குடும்பங்களை சேர்ந்த சுமார் 130 சிறுவர்கள் தற்போது நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
