உறைகுளிரில் உயிரிழந்தவர்கள் அனைவரும் சீனர்கள்! லண்டன் சம்பவத்தின் முழுமையான விவரம்!!

Essex Police said the people were all pronounced dead at the scene in an industrial park in Grays, east of London.

Essex Police said the people were all pronounced dead at the scene in an industrial park in Grays, east of London. Source: Reuters

குளிர் கொள்கலனில் சட்ட விரோதமாக லண்டனுக்குள் கொண்டுவரப்பட்டபோது உடல் உறைந்து உயிரிழந்த அத்தனை பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று லண்டன் பொலீஸார் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த புதன்கிழமை லண்டனுக்குள் வந்த இந்த குளிர்கொள்கலனில் இனந்தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானபோது லண்டன் ஊடகங்களில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியில் இந்த செய்தி பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

கடந்த இரண்டு நாட்களில் இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணைகளை நடத்திவரும் பொலீஸார் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட கொள்கலன் இணைந்த பார ஊர்தியை ஓட்டிவந்த இளைஞன் தொடர்ந்தும் பொலீஸாரின் தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டுவருகிறார்.

குறிப்பிட்ட சீனர்கள் அனைவரும் சீனாவிலிருந்து ஐயாயிரம் மைல்கள் பயணம் செய்து வந்து இந்த கொள்கலன் வழியாக லண்டனுக்குள் வருவதற்கு முயற்சிசெய்திருக்கிறார்கள் என்று பூர்வாங்க விசாரணைகளில் பொலீஸார் சந்தேகிக்கிறார்கள். இவர்கள் ஹொலெண்ட், பெல்ஜியம், பல்கேரியா வழியாக மிகப்பெரியதொரு பயணத்தை மேற்கொண்டிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் குறிப்பிட்ட குளிர் கொள்கலன் வழியாக லண்டனுக்குள வருவதற்கு யார் யார் எல்லாம் உதவி செய்திருக்கிறார்கள், இந்த பயணத்தை பின்னணியில் இயக்கியவர்கள் யார் என்பது தொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. முக்கியமாக, இந்த குளிர் கொள்கலனை பாரஊர்தியில் இணைத்து ஓட்டி வந்த வட அயர்லாந்தை சேர்ந்த றொபின்ஸன் என்ற இளைஞனுக்கும் இந்த கடத்தலில் தொடர்பிருக்கிறதா? தான் ஓட்டி வந்த பாரஊர்திக்குள் 39 பேரை லண்டனுக்கு கொண்டுவருகிறோம் என்ற தகவல் அவருக்கு முன்னமே தெரியுமா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சடலங்களை கண்டது எப்போது?

கடந்த செவ்வாய்கிழமை நடுநிசி தாண்டி சில நிமிடங்களில் குறிப்பிட்ட குளிர் கொள்கலனை Purfleet துறைமுகத்திலிருந்து றொபின்ஸன் தனது பார ஊர்தியுடன் பொருத்திக்கொண்டு லண்டனுக்கு புறப்பட்டிருக்கிறார். புதன்கிழமை நடுநிசி தாண்டி 1.40 மணியளவில் லண்டன் Essex பிரதேசத்திலுள்ள Waterglade Industrial Park பகுதியினுள் பார ஊர்தி வந்தவுடன், வழக்கபம்போல அதிலுள்ள ஆவணங்களை எடுப்பதற்காக பின் கதவை திறந்திருக்கறார் றொபின்ஸன். உள்ளே 39 பேர் சடலங்களாக கிடப்பதை கண்டிருக்கிறார். உடனடியாக அம்புலன்ஸிற்கு அழைக்க, 30 நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு அவசர பிரிவினர் விரைந்திருக்கிறார்கள். 31 ஆண்களும் எட்டு பெண்களும் குளிரில் உறைந்து உயிரிழந்து கிடந்த காட்சியை கண்ட அம்புலன்ஸ் பிரிவினர் உடனடியாக பொலீஸாரை அழைக்க, அவர்கள் வந்து அந்தப்பகுதியை சுற்றிவளைத்து விசாரணைகளை தொடங்கியிருந்தார்கள். பாரஊர்தி ஓட்டுனர் றொபின்ஸனை கொலைச்சந்தேக நபராக கைது செய்து சென்றுள்ளார்கள்

யார் இந்த றொபின்ஸன்?

வட அயர்லாந்தை சேர்ந்த றொபின்ஸன் என்ற 25 வயது இளைஞன் கடந்த ஒரு வருடமாக இந்த தொழிலை செய்துவருகிறார். றொபின்ஸனின் துணைவிக்கு விரைவில் இரட்டை குழந்தைகள் கிடைக்கவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக இவர் தனது பாரஊர்திகளோடு நின்று படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். அந்த வகையில், இவரது தொழில் நடவடிக்கைகள் இவ்வளவு காலமும் மர்மமானதொன்றாக நடைபெற்றுவரவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை அடுத்து றொபின்சன் கைது செய்யப்பட்டதுடன் வட அயர்லாந்திலுள்ள அவரது இரண்டு வீடுகளும் லண்டனிலுள்ள இன்னொரு வீடும் பொலீஸாரினால் சோதனையிடப்பட்டிருக்கிறது. தங்களது மகன் கைது செய்யப்பட்டதையடுத்து, அதிர்ச்சியடைந்துள்ள றொபின்ஸனின் பெற்றோர் உடனடியாகவே லண்டனுக்கு வந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்கள் யார்?

சுமார் ஐயாயிரம் மைல்கள் பயணம் செய்து லண்டனுக்குள் கொண்டுவரப்பட்ட சீனர்கள் அனைவரும் லண்டனுக்குள் சட்டவிரோதமாக தொழில் செய்வதற்கு அடிமைகளாக கடத்தப்பட்டவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. லண்டனிலுள்ள நகச்சுத்திகரிப்பு நிலையங்கள், விப்பச்சார விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றில் வேலைசெய்வதற்கென்று இவ்வகையானவர்கள் சீனாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கொண்டுவரப்படுவது இது முதல் தடவை அல்ல என்றும் லண்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அடிமை வர்த்தகம் செய்யும் ஐரோப்பிய ஆட்கடத்தல்காரர்கள் பலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், தற்போது இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரும் வட அயர்லாந்தை தளமாக கொண்டு இயங்கும் ஆட்கடத்தல் கும்பல்களா என்று பொலீஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

உயிரிழந்தது எப்படி?

குளிர்கொள்கலனில் கொண்டுவரப்பட்ட 39 பேரும் குறைந்தது பதினைந்து மணி நேரமாக மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் (-25 C) உறை குளிரில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கொள்கலன் பிஸ்கட் மற்றும் காளான்களை ஏற்றுவதற்காக குளிரூட்டப்பட்ட தாங்கியாக பயன்படுத்தப்படுவது வழக்கம். அதற்குள்தான் இந்த 39 பேரும் பதுங்கியிருந்து வந்திருக்கிறார்கள். இந்த கொள்கலனிலிருந்து சத்தம் வெளியே கேட்காது. குளிரூட்டி தொடர்ந்து இயங்கியபடியிருக்கும். மீட்கப்பட்ட சடலங்களை வைத்து பார்க்கும்போது அவர்கள் அனைவரும் பார ஊர்தி நிறுத்தப்படுவதற்கு முன்னரே இறற்துவிட்டதாக தெரிகிறது என்று முதல் கட்ட தகவல்களில் தெரிவிக்கப்படுகிறது.

உடல் வெப்பநிலை 35 டிகிரிக்கு குறைவாக செல்கின்றபோது, அவ்வாறு குறையும் ஒவ்வொரு டிகிரியின்போதும் மூளையினால் ஒக்ஸிஜனை உள்வாங்கும் சக்தி மூன்று முதல் ஐந்து வீதத்தினால் குறைவடைகிறது. உடல் வெப்பநிலை 31 டிகிரிக்கு கீழ் செல்கின்றபோது நடுக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். இரத்தம் உறைய ஆரம்பித்து ஒக்ஸிஜனை உள்ளெடுக்கும் சக்தி 25 வீதத்தினால் வீழ்ச்சியடையும். அதனை தொடர்ந்து சிறுநீரகம் பாதிக்கப்படும். 30 டிகிரிக்கு கீழ் உடல் வெப்பநிலை குறைவடையும்போது வழக்கத்திலும்விட 66 வீதம் குறைவான இரத்த ஓட்டமே உடலில் இடம்பெறுகிறது.

ஆக, மைனஸ் 25 டிகிரி உறை குளிரில் நீண்ட நேரம் பயணித்தவர்கள் அனைவருக்கும் மேற்குறிப்பிட்ட உடல் மாற்றங்கள் நிகழ்வந்து அவர்கள் உயிரிழந்தமைக்கான வாய்ப்புக்களே அதிகம் என்று பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


3 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now