வேப் என்னும் முறையால் நெருப்பில்லாமல் புகை பிடிக்கும் ஈ-சிகரெட் (e-cigarette) தயாரிப்புகளை விரைவில் தடை செய்வதாக அமெரிக்க அதிபர் Donald Trump அறிவித்தார். இந்த புகை பிடிக்கும் முறையால், பல இளையோர் உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளார்கள் என்று கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது. ஒரு பதின்ம வயது பையனுக்குப் பெற்றோராக இருக்கும் தாங்கள் இப்படியான பொருட்களால் இளையோர் கொல்லப்படுவது குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அதிபர் Donald Trump மற்றும் அவரது துணைவியார் Melania Trump, வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்கள்.

நாங்கள் இருவரும் அது குறித்து வாசிக்கிறோம். பலரும் அது குறித்து வாசிக்கிறார்கள். வேப் செய்வதால் பல இளைஞர்கள் இறப்பை சந்திக்கிறார்கள், என்று அமெரிக்க அதிபர் மேலும் கூறினார்.
உணவு மற்றும் மருந்துகளை கட்டுப்படுத்தும் Food and Drug Administration (FDA) என்ற அமைப்பின் அதிபர் Ned Sharpless, சுகாதாரம் மற்றும் மனித வள அமைச்சர் Alex Azar ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.
“புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது,” என்றும் “இந்தத் தடை நடைமுறைக்கு வர முப்பது நாட்கள் இருக்கின்றன” என்றும் “புகையிலை தவிர்ந்த வேறு பொருட்களைப் பயன்படுத்தும் அனைத்து ஈ-சிகரெட்டும் சந்தையிலிருந்து அப்புறப்படுத்தப்படும்,” என்று Alex Azar மேலும் கூறினார்.

2019 ஆம் ஆண்டிற்கான தரவுகளின் படி, ஆரம்ப தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் கால் வாசிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 30 நாட்களில் ஈ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
புகையிலை அல்லாத சுவைகள் இளைஞர்களை அதிகளவில் கவர்வதால், அதனை தாம் முதலில் தடை செய்வதாக கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறினார்கள்.
இளையோரிடையே பழம், மெந்தோல் மற்றும் புதினா சுவைகள் பிரபலமானவை.
புகையிலை சுவை கொண்ட ஈ-சிகரெட்டுகளுக்கு ஆரம்பத்தில் விலக்கு அளிக்கப்படும். ஆனால், தங்கள் தயாரிப்புகளை தொடர்ந்து விற்பனை செய்ய, அடுத்த வருடம் மே மாதத்திற்கு முன்னர் FDAஇன் ஒப்புதலுக்கு உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
“ஆனால், இளையோர் புகையிலை சுவை கொண்ட ஈ-சிகரெட்டை நாடி செல்கிறார்கள் என்று அறிந்தால், அந்த பயன்பாட்டைக் குறைக்க நாங்கள் தேவையானவற்றை செய்வோம்” என்று Alex Azar ட்வீட் செய்துள்ளார்.
உலகளாவிய வகையில் 10.2 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை விற்பனை செய்யும் வேப் நிறுவனங்களுக்கு, இது ஒரு பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது.
மர்மமான நோய்
சுவாசிக்க சிரமம் மற்றும் மார்பு வலி போன்ற முறைப்பாடுகளுடன் 450ற்கும் மேற்பட்டவர்கள் அண்மையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் e-cigarette பயன்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல பதின்ம வயது இளைஞர்கள், மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட மயக்க நிலையில் (coma) வைக்கப்பட்டுள்ளனர் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு இளைஞன் மீண்டும் எழுந்தால் அவருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்படும் என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்த விசாரணை முடியும் வரைக்கும் வேப் செய்வதை நிறுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பயன்படுத்திய பொதுவான வேதியியல் பொருள் என்ன என்று அதிகாரிகள் இன்னமும் அடையாளம் காணவில்லை, ஆனால் வைட்டமின்-ஈ எண்ணை கலந்த கஞ்சா குடுவைகள் கள்ளமாக விற்கப்படுவதாக நியூயார்க் நகர சுகாதாரத் துறை விசாரித்து வருகிறது. வைட்டமின்-ஈ சுவாசப்பையினுள் உள்ளிழுக்கும்போது பல தீங்குகளை விளைவிக்கும் ஒரு பதார்த்தம்.
'சட்டவிரோத' விளம்பரங்கள்
பாரம்பரிய புகைப்பழக்கத்தை விட பாதுகாப்பான மாற்று வழியாக ஈ-சிகரெட்டுகள் கருதப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு முதல் இவை அமெரிக்காவில் கிடைக்கின்றன. இதனால் ஏற்படும் உபாதைகள் தற்போது பரவலாக அறியப்பட முன்னரே, ஈ-சிகரெட்டுகள் குறித்து வல்லுநர்கள் எச்சரித்திருந்தாலும், இதன் நீண்டகால விளைவுகளைப் பற்றி அறிய பல ஆண்டுகள் எடுக்கலாம்.
பாரம்பரிய சிகரெட்டுகளில் 7,000 இரசாயன கூறுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவு தொகையான இரசாயன பொருட்கள் ஈ-சிகரெட்டுகளில் இல்லை என்றாலும், தீங்கு விளைவிக்கும் பல பொருட்கள் இருக்கின்றன என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. ஈ-சிகரெட்டில் வரும் நீராவியில் உலோகத்தின் தடயங்கள் இருக்கக்கூடும் என்று கடந்த வருடம் தயாரிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மட்டும் தான் ஈ-சிகரெட் புகைப்பதால் நோயாளிகளுக்கு வரும் உபாதைகள் குறித்து தரவுகள் வெளியிடுகின்றன, மற்றைய நாடுகள் ஏன் அப்படி செய்வதில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவை புதியவையா, அல்லது முன்னர் தவறாக கணிக்கப்பட்டவற்றை, வைத்தியர்கள் இப்பொழுது சரியாகக் கண்டுபிடித்துள்ளார்களா என்பதும் தெளிவாக இல்லை.
எது எப்படியிருந்தாலும், பொது மக்களின் கருத்து மாறியுள்ளது அதனால் அரசுகளின் கருத்துகளும் மாறுகின்றன என்பது தெரிகிறது.
அமெரிக்க அதிபரின் கருத்திற்கு, அமெரிக்காவின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.
ஈ-சிகரெட் பாவனைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு 160 மில்லியன் டொலர் செலவழிக்கப் போவதாக அரசியல்வாதியும், முன்னாள் நியூயார்க் நகர மேயருமான மைக்கேல் ப்ளூம்பெர்க் அறிவித்தார்.

தவறாக விளம்பரம் செய்கிறது என்று ஈ-சிகரெட் தயாரிப்பாளர் JUUL மீது FDA குற்றம் சுமத்தியுள்ளது. புகைபிடிப்பதை விட ஈ-சிகரெட் குறைவான தீங்கு விளைழைவிப்பதாக விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும் என JUUL எச்சரிக்கப்பட்டுள்ளது.
.
