உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பலரை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய 'Blue Whale' விளையாட்டு மற்றும் சமீபத்தில் பிரபலமான 'KiKi' சவாலைத் தொடர்ந்து தற்போது 'MoMo' சவால் உலகெங்கும் பிரபலமாகி வருகிறது.
'MoMo' சவால் விளையாட்டால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஆர்ஜென்டினாவில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், இவ்விளையாட்டு தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டு அனிமேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வடிவம் தான் 'MoMo'.
முகநூல், WhatsApp-இல் வலம் வரும் 'MoMo' உருவத்தை அடையாள சின்னமாக கொண்ட இந்த விளையாட்டில் ஈடுபடுவோருக்கு அடுத்தடுத்து சவால் விடுக்கும் வகையில் விசித்திரமான படங்கள் வரும். அந்த படங்களை தொடர்ந்து மனதை பாதிக்கும் வகையில் காட்சிகளும், அந்தரங்க தகவல்களை சேகரிக்கும் வகையிலான கேள்விகளும் வரும். தொடர்ந்து விளையாடுவோரை தற்கொலையை நோக்கி துண்டுவது போல கட்டளைகள் வருவதாக மெக்சிகோ மற்றும் ஸ்பெயின் போலீசார் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் சமூக ஊடகங்களில் உருவெடுத்துவரும் இது போன்ற ஆபத்தான சவால்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
