விக்டோரியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக இருவர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று விக்டோரிய மரண விசாரணை பிரிவு தரவுகள் தெரிவித்திருக்கின்றன.
இந்த வருடம் ஜூலை மாதம் வரைக்கும் 360 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மரண விசாரணைகள் பிரிவு, இவ்வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 740-ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
விக்டோரியாவின் உளவளதுறை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் ஒரு அங்கமாக இத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த வருடம் 600 விக்டோரியவாசிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மரண விசாரணைகள் பிரிவு, 2009 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையில் தற்கொலை செய்துகொண்டவர்களின் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் - ஆறு வாரத்திற்குள் - உதவிகோரி சுகாதார அமைப்புக்களை நாடியிருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பான விசாரணைகளில் பங்காற்றிவரும் மருத்துவர் Jeremy Dwyer, இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது - தற்கொலை என்பது உளவியல் அதிர்ச்சியின் விளைவினால் ஏற்படுகின்ற அனர்த்தம். இந்த முடிவை எடுப்பவர்கள் நிச்சயமாக தங்களது குடும்ப மருத்துவர்களுடன் தொடர்பிலிருப்பார்கள். ஆகவே, அவர்களது மருத்துவர்கள் இது தொடர்பிலான அறிகுறிகளை கண்டுகொண்டால், குறிப்பிட்ட நபர்களை உளவளத்துணை வழங்கும் பிரிவுக்கு அனுப்பவேண்டும். இதுபோன்ற படிமுறைகளினால், இந்த அனர்த்தத்தை குறைத்துக்கொள்ளலாம் - என்று கூறியுள்ளார்.
If you or someone you know needs help, contact Lifeline on 13 11 14 , Beyond Blue on 1300 224 636 or the Suicide Call Back Service 1300 659 467.
