விக்டோரிய வீதிகளில் பொருத்தப்பட்ட புதிய டிஜிட்டல் கமராக்களிடம் அகப்படுகின்ற- வீதி விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது என்றும் அதன் விளைவாக அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற தண்டப்பணத்தின் தொகையும் லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது என்றும் விக்டோரிய வீதிப்பாதுகாப்பு கமாராக்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
2015 - 2016 ஆண்டு காலப்பகுதியில் பொருத்தப்பட்ட புதிய பத்து கமராக்களினால் வீதி விதிகளை மீறிய 660 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. அவற்றின் மூலம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் டொலர்கள் அரசுக்கு வருமானமாக கிடைத்தது.
ஆனால், குறிப்பிட்ட கமராக்கள் டிஜிட்டல் முறையில் தரமுயர்த்தப்பட்ட பின்னர், வீதி விதிகளை மீறிய சம்பவங்கள் 51 ஆயிரமாக அதிகரித்துள்ளதுடன் அவற்றின் மூலம் கிடைத்துள்ள தண்டப்பணத்தின் தொகை ஒரு கோடி 26 லட்சத்து 50 ஆயிரம் டொலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Clyton வீதியிலுள்ள கமராக்களினால் 2015-16 இல் பெறப்பட்ட $9,854 தண்டப்பணத்தொகை கடந்த ஆண்டு 41 லட்சம் டொலர்களாக அதிகரித்துள்ளது.
St Kilda பகுதியில் Brighton - Glen Eira சந்தியில் அமைந்துள்ள கமராவினால் 2015-16 இல் கிடைத்த $35,000 தண்டப்பணம் 2017-18 இல் 32 லட்சம் டொலர்களாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.