விக்டோரியாவில் அண்மையில் அறிமுகமான கருணைக்கொலைக்கு அனுமதியளிக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி உயிர்துறக்கும் முதல்தொகுதி நபர்களின் பட்டியலுக்குள் தானும் இடம்பெறவேண்டுமென குடல் புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட தாயொருவர் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
குறிப்பிட்ட புற்றுநோய் ஈரலுக்கும் பரவி இன்னும் ஒரு வருடம் மாத்திரம்தான் அவர் உயிர்வாழக்கூடிய சாத்தியமுண்டு என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தனது விண்ணப்பம் குறித்து அவர் கூறும்போது - தனது உடலில் பரவியுள்ள கொடிய புற்றுநோயின் மூலம் தனது சாவு தன்னை தின்று தீர்ப்பதற்கு முன்னர் தானே அந்த சாவை தெரிவு செய்துகொள்வது தனக்கு திருப்தியை தரும் என்று தெரிவித்துள்ளார். சுமார் நாற்பது வருடங்களாக தாதியாக பணிபுரிந்த குறிப்பிட்ட பெண்மணி கடந்த மார்ச் மாதம் முதல் புற்றுநோயின் இறுதிக்கட்ட மருத்துவ படிமுறையான கீமோவையும் தவிர்த்துள்ளார்.
விக்டோரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்படி கருணைக்கொலை சட்டம் நாளை விக்டோரியாவில் நடைமுறைக்கு வருகிறது. சட்டரீதியாகியுள்ள இந்த நடைமுறை விக்டோரிய அரசுக்கு மிகுந்த அழுத்தங்களை கொண்டுவரப்போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயினால் பீடிக்கப்பட்டு இன்னும் 12 மாதங்கள் மாத்திரமே உயிர்வாழ்வார்கள் என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கருணைக்கொலைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு ஊசி மருந்தின் மூலம் இந்த மரணத்தை நிறைவேற்றும் முறையே விக்டோரியாவில் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Readers seeking support and information about suicide can contact Lifeline 24 hours a day online and on 13 11 14. Other services include the Suicide Call Back Service on 1300 659 467, Beyond Blue and Kids Helpline (for people aged five to 25) on 1800 55 1800.
Share
