பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் - வேண்டுமென்றே விதிகளை மீறி - வாகனங்களை ஓடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு விக்டோரிய பொலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு மெல்பேர்ன் நகரில், பேர்க் வீதியில் இடம்பெற்ற - அப்பாவி பொதுமக்களின் மீது வாகனத்தை செலுத்தி ஆறு பேரை படுகொலை செய்த - சம்பவம் உட்பட, அண்மைக்காலங்களில் வாகனங்களினால் பொதுமக்களை மோதி படுகொலை செய்த பல சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து, பொலீஸ் தரப்பினர் மேற்கொண்ட நீண்ட ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேர்க் வீதி சம்பவத்தில், குறிப்பிட்ட நபர் மீது பொலீஸார் முன்னரே தாக்குதல் நடத்தி அனர்த்தத்தை நிறுத்தியிருக்கவேண்டும் என்ற விவாதம் பல தரப்பிலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதற்குரிய அதிகாரம் பொலீஸாருக்கு உள்ளதா? தற்போதுள்ள பொலீஸ் பயிற்சிகளில் வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்கள் என்ன என்பவை குறித்தெல்லாம் கடந்த 18 மாதங்களாக பொலீஸார் தரப்பில் நீண்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைகளை அடுத்து, விக்டோரிய பொலீஸாருக்கு மேற்படி அதிகாரத்தை வழங்குவது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், கட்டுக்கடங்காது மக்களுக்கு ஊறு விளைவிப்பதற்கு வெறிபிடித்து நிற்கும் இந்த வாகன ஓட்டுனர்களை அடக்குவதற்கு முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அவை பலிக்காதுபோனாலேயே துப்பாக்கிப்பிரயோகம் செய்வதற்கான முடிவு எடுக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
