வேலைப்பழு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தினை சமாளிப்பதற்கு தான் தியானத்தில் ஈடுபடுவதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.
கடந்த ஐம்பது வருட ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் Peter Dutton மிகவும் மோசமானவர் என்று கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் பிரதமர் Paul Keating கூறியிருந்த நிலையில், Peter Dutton தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் அவற்றுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் குறித்து விரிவாக பேசும்போது The News Daily ஊடகத்துக்கு அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.
தினமும் 16 மணிநேரம் பணிபுரியும் தனக்கு வேலையில் ஏற்படும் அழுத்தம் அபரிமிதமானது என்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்கு அதற்குரிய பிரிவினருக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவது மிகவும் அழுத்தம் தரக்கூடிய விடயம் என்றும் Dutton கூறியுள்ளார்.
தீவிர மன அழுத்தம் தரக்கூடிய இப்படியான பணிகளில் உள்ள அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் எவ்வகையான வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள் என்று அவதானித்தபோது - தியானம் தனக்கு மிகப்பெரிய வழிமுறையாக தெரிந்தது என்றும் பொதுவாழ்வுக்கும் தனிவாழ்வுக்கும் இடையில் ஊடாடிக்கொள்வதற்கு இது பெரிதும் துணைபுரிகிறது என்றும் Dutton தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு உறுப்பினர்கள் சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட செய்திகள் அண்மையில் வெளிவந்திருந்தமை தெரிந்ததே.
Share
