ஆஸ்திரேலியர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் சுமார் 10 ஆயிரம் கோடி டொலர் ($100 bn) பணம் காணப்படுவதாக ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்தின் பிந்திய கணக்காய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 65 நாடுகளிலுள்ள 16 லட்சம் வங்கிக்கணக்குகளில் இந்தப்பணம் உள்ளமை தங்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரித்திணைக்களம் கூறியுள்ளது.
இந்தப்பணத்தை வைத்திருப்பவர்கள் பலர் ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்துக்கு தங்களது கணக்கு வழக்குகளை காண்பிக்கத்தவறியுள்ளார்கள் என்றும் அவர்களுக்குரிய கடிதங்கள் வரித்திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இதுதொடர்பான தகவல்களை சேகரித்து ஏனைய நாடுகளுடன் அவற்றை சட்ட ரீதியாக பகிர்ந்துகொள்ளும் அரசு ஏஜன்சிகளின் ஊடாக இந்த கணக்குகளை பேணுபவர்களின் சகல விவரங்களையும் தாங்கள் பெற்றுள்ளதாகவும், இவ்வாறு ஆஸ்திரேலிய அரசுக்கு வரி செலுத்த தவறிய இரண்டாயிரம் பேருக்கு வரித்திணைக்களம் அண்மையில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும், இவ்வாறு வரி செலுத்த தவறிய தொகை சுமார் 2 கோடி டொலர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.