ஒருவர் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக தங்கியிருந்து வேலை பார்ப்பதற்கான வீசாவே 457 வீசா என அழைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்கு நாட்டிற்குள் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வரவழைப்பதற்கு இந்த 457 வீசா வழிசமைக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50ஆயிரம் 457 வீசா விண்ணப்பங்கள் ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.
ஆனால் கடந்த 2013 ஜுலை 1ம் திகதி முதல் இந்த 457 வீசா நடைமுறையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்திவரும் அரசு சில தினங்களுக்கு முதல் மற்றுமொரு முக்கிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது 457 வீசாவில் தங்கியிருந்து வேலை செய்யும் ஒருவரின் வீசாவோ அல்லது அவர் தொழில் செய்வதற்கான காலமோ முடிவடைந்த பின்னர், மேலதிகமாக 60 நாட்கள் மட்டுமே அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும்.
ஆரம்பத்தில் 28 நாட்களாக இருந்ததை லேபர்கட்சி தனது ஆட்சியின்போது 90 நாட்களாக அதிகரித்திருந்தது. இதனைத் தற்போது 60 நாட்களாக லிபரல்- நேஷனல் கூட்டணி அரசு குறைத்துள்ளது.
இந்த 60 நாட்களுக்குள் குறித்த நபர் ஆஸ்திரேலியாவில் வேறு வேலைகளைத் தேட முடியும்.
இப்புதிய நடைமுறை இன்று முதல் (19/11/2016) நடைமுறைக்கு வருகின்றது.
வெளிநாட்டு பணியாளர்களை விட உள்நாட்டிலுள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இம்மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.