கேள்வி: உங்கள் வயது என்ன?
இது கேட்கப்படக்கூடாத கேள்வி.
வயதைக் கேட்டு, ஒருவேளை அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை என்றால் Age-Discrimination - வயதின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படும் வாய்ப்பு இருப்பதாக பொருள் கொள்ளப்படலாம். அதற்காக புகார் தரப்படலாம்.
ஆனால் வயது குறைந்தவர்களை பணியில் அமர்த்துவதை சில வேலைகள் தடை செய்வதால் உங்கள் வயது மிகக் குறைந்த வயதா என்பதை அறிய சிலரிடம் அதைக் கேட்கலாம்.
கேள்வி: உங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றார்களா? அல்லது, நீங்கள் குழந்தை பெறும் திட்டம் வைத்துள்ளீர்களா?
இது கேட்கப்படக்கூடாத கேள்வி.
பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் மகப்பேறு விடுமுறை [maternity leave] பெறும் வாய்ப்பு உண்டு என்பதால் வேலை தருகின்றவர் குழந்தை பெற்றெடுக்கும் வயதிலுள்ள பெண்களை வேலைக்கமர்த்த விரும்புவதில்லை. அப்படி நீங்கள் உணர்ந்தால் Sex Discrimination Act அடிப்படையில் புகார் தரலாம். எனவே இந்த கேள்வியை வெளிப்படையாக கேட்காமல் பெண்களிடம் மறைமுகமாக இந்த கேள்வியை கேட்க முற்படுவர். எனவே உஷார்!
கேள்வி: உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?
இது கேட்கப்படக்கூடாத கேள்வி.
இதுவும் வேலை தருகின்றவருக்கு தேவையற்ற தகவல். இதன் மூலம் பாகுபாடு காட்டப்படும் வாய்ப்பிருப்பதால் இந்த கேள்வி கேட்கப்படக்கூடாது.
கேள்வி: உங்கள் உடல் நலம் அல்லது மருத்துவத் தகவலை (medical condition) அறிந்துகொள்ளலாமா?
இது கேட்கப்படக்கூடாத கேள்வி.
இதுவும் வேலை தருகின்றவருக்கு தேவையற்ற தகவல். இதன் மூலம் பாகுபாடு காட்டப்படும் வாய்ப்பிருப்பதால் இந்த கேள்வி கேட்கப்படக்கூடாது. ஆனால் காவல்துறை, பாதுகாப்புத்துறை, உடல்நலம் சார்ந்த தொழில் போன்ற அந்த தொழிலுக்கு மிகவும் தேவையான தகவல் என்றால் மட்டுமே இந்த கேள்வி அல்லது அது தொடர்பான பரிசோதனைக்கு நம்மை அனுப்பிவைக்கலாம்.
கேள்வி: உங்கள் மதம் என்ன? இனம் என்ன? எந்த நாட்டிலிருந்து வந்துள்ளீர்கள்? எப்படி வந்தீர்கள்? அகதியாக வந்தீர்களா? அல்லது குடியேற விண்ணப்பித்து வந்தீர்களா? உங்கள் மொழி என்ன?
இவை தேவையற்ற அல்லது சில வேளைகளில் கேட்கப்படக்கூடாத கேள்விகள்.
ஏனெனில் இந்த கேள்விகளுக்கான பதில்கள் வேலை தருகின்றவருக்கு தேவையற்ற தகவல். இதன் மூலம் பாகுபாடு காட்டப்படும் வாய்ப்பிருப்பதால் இந்த கேள்விகள் கேட்கப்படக்கூடாது.
ஆனால் சில மத சம்பந்தமான தொழிலுக்கு விண்ணப்பித்திருக்கும் ஒருவரிடம் மதம் தொடர்பான இந்த கேள்வி கேட்கப்பட்டால் அது தவறில்லை. அதுபோன்று சில மொழி சம்பந்தமான தொழிலுக்கு விண்ணப்பித்திருக்கும் ஒருவரிடம் மொழி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டால் அது தவறில்லை. அல்லது ஆங்கிலத்தையும் தாண்டி உங்களுக்கு பிற மொழி தெரியுமா என்பதை அறியும் விதத்தில் கேட்கப்பட்டாலும் தவறில்லை. ஆனால் பாகுபாடு காட்டப்படும் நோக்கில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டால் அது குறித்து புகார் தரலாம்.
கேள்வி: நீங்கள் எப்போதாவது workers' compensation எனப்படும் தொழிலாளிக்கான இழப்பீடு பெற விண்ணப்பித்துள்ளீர்களா?
இது கேட்கப்படக்கூடாத கேள்வி.
இதுவும் வேலை தருகின்றவருக்கு தேவையற்ற தகவல். இவர் workers' compensation எனப்படும் தொழிலாளிக்கான இழப்பீடு பெற விண்ணப்பிக்கும் வாய்ப்பு உண்டு என்ற ரீதியில் இதன் மூலம் பாகுபாடு காட்டப்படும் வாய்ப்பிருப்பதால் இந்த கேள்வி கேட்க்கப்படக்கூடாது. மட்டுமல்ல, ஒருவர் மாற்றுத் திறனாளி ஊனம் disability அல்லது நோய் இருப்பதை கண்டறியும் வகையிலும் இந்த கேள்வி இருப்பதால் இந்த கேள்வி Fair Work Act ஐ மீறும் என்று பார்க்கப்படும் என்பதால் இந்த கேள்வி கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.
கேள்வி: நீங்கள் மருந்து சாப்பிடுகின்றீர்களா?
இது கேட்கப்படக்கூடாத கேள்வி.
ஆனாலும் நீண்ட தூரம் வாகனம் ஓட்ட வேண்டும், இயந்திரங்களை இயக்கவேண்டும் என்ற தொழிலுக்கு விண்ணப்பத்திருப்பவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டால் அது தவறில்லை. ஏனெனில் மருந்து, மாத்திரை உண்பது ஒருவரின் செயலை பாதிக்கும் என்பதால் அந்த வேலை நிமித்தம் இந்த கேள்வி கேட்கப்படலாம்.
கேள்வி: நீங்கள் மது அல்லது போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் உடையவரா?
இது கேட்கப்படக்கூடாத கேள்வி.
இதுவும் வேலை தருகின்றவருக்கு தேவையற்ற தகவல். இதன் மூலம் பாகுபாடு காட்டப்படும் வாய்ப்பிருப்பதால் இந்த கேள்வி கேட்கப்படக்கூடாது.
ஆனாலும் பணியிடங்களில் அறிவிக்கப்படாமல் தொழிலாளியிடம் மது அல்லது போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்படும் வாய்ப்பு உண்டு அன்பதும், அது சட்டபூர்வமானதே என்பதாலும் வேலைக்கு சேரும் தொழிலாளி அது குறித்து கவனமாக இருத்தல் அவசியம்.
கேள்வி: நீங்கள் தொழிற்சங்க உறுப்பினரா?
இது நிச்சயம் கேட்கப்படக்கூடாத கேள்வி.
இதுவும் வேலை தருகின்றவருக்கு தேவையற்ற தகவல். இதன் மூலம் பாகுபாடு காட்டப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் இந்த கேள்வி நிச்சயம் கேட்கப்படக்கூடாது. இந்த கேள்வி Fair Work Act – சட்டம் மற்றும் பாகுபாடு காட்டுவதை தடை செய்யும் சட்டங்களை மீறும் கேள்வியுமாகும்.
கேள்வி: நீங்கள் ஏன் முந்தய வேலையை விட்டுவிட்டீர்கள்?
இந்த கேள்வியை வேலை தருகின்றவர் கேட்பதில் தவறில்லை. அது சட்டத்திற்கு உட்பட்டதே.
கேள்வி: நீங்கள் குற்றச் செயல் புரிந்துள்ளீர்களா?
இந்த கேள்வி கேட்கலாமா கூடாதா என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம்.
ஒருவர் பணியமர்த்தப்படும் முன்னர் criminal history check நடத்தப்படும் வாய்ப்பு உண்டு என்றபோதிலும், இது அனைத்து இடங்களுக்கும் பொருந்தாது.
பெடரல் அரசின் பணிகளுக்கு இந்த கேள்வி நேர்முகத்தில் கேட்கப்படுதல் சரியல்ல என்றும், அப்படி கேட்கப்பட்டால் Australian Human Rights Commission னில் புகார் தரலாம் என்றும் கூறப்படுகிறது.
கேள்வி: ஆஸ்திரேலியாவில் நீங்கள் சட்டபூர்வமாக பணிபுரிய உங்களுக்கு அனுமதியுள்ளதா?
நிச்சயம் இந்த கேள்வி கேட்கப்படலாம். முழுமையாக சட்டத்திற்கு உட்பட்ட கேள்வியே இது.
கேள்வி: உங்கள் Facebook பக்கத்தை நாங்கள் பார்க்கலாமா?
இப்போதெல்லாம் நம் அனுமதி இன்றியே பிறர் நம் Facebook பக்கத்தை பார்த்திருக்கும் வாய்ப்புண்டு. ஆனால் password போன்றவற்றை நேர்முகம் காண்கின்றவர்கள் கேட்டால் அது சட்டத்திற்கு புறம்பானது.
