Invictus games-போரில் பாதிக்கப்பட்ட முன்னாள் படையினர் பங்குபற்றும் சர்வதேச விளையாட்டுப்போட்டிக்காக சிட்னிக்கு வந்த ஆப்கான் அணியின் ஆறு வீரர்கள் நாடு திரும்பவில்லை என்றும் அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் கோருவதற்கு திட்டமிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிட்னியில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான Invictus games போட்டிகளை ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர் ஹரி ஆரம்பித்துவைத்திருந்தார்.
இம்முறைப்போட்டிகளில் சுமார் 18 நாடுகளைச்சேர்ந்த வீரர்கள் பங்குகொண்டார்கள். ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த வீரர்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டதன் பிரகாரம் விமானமேறி தாய்நாட்டுக்கு திரும்பிவிட்டார்கள். ஆனால், அணியின் பயிற்றுவிப்பாளரும் ஆறு வீரர்களும் விமானநிலையத்துக்கு போகவில்லை. அவர்கள் அனைவரும் அகதிகளாக ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு திட்டமிடுவதாக நம்பப்படுகிறது.
அவர்கள் தரப்பில் பேசவல்ல ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆப்கான் நாட்டினை பூர்வீகமாக கொண்டவர் கூறும்போது, அணிவீரர்கள் எவருமே ஆஸ்திரேலியா வருவதற்கு முன்னர் இங்கு தங்குவதற்கான எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் இங்கு தங்கியிருந்த பத்து நாட்கள் அவர்களது மனதை வெகுவாக மாற்றிவிட்டது. முதன் முதலாக வெளிநாடொன்றுக்கு வந்த இவ்வீரர்கள் இந்த நாட்டில் காணப்படும் அமைதியினாலும் பாதுகாப்பு மிக்க சூழ்நிலையினாலும் வெகுவாக ஈர்க்கப்பட்டுவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் நவம்பர் மாத இறுதிவரை விஸா உள்ளது என்றும் அதுவரை அவர்கள் ஆஸ்திரேலியாவில் சட்டபூர்வமாக தங்கியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சகமும் இந்த வீரர்களின் விஸா தொடர்பான விவரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட விளையாட்டுப்போட்டிக்கு வருகை தந்திருந்த வேறு எந்த நாட்டு வீரர்களும் இவ்வாறு ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரியதாக எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்த 250 வீரர்கள் சொந்தநாட்டுக்கு திரும்பவில்லை. இவர்களில் 200 பேர் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
