இங்கிலாந்தில் 104 வயது மூதாட்டி ஒருவர் தனது கடைசிகால ஆசையாக பொலீஸாரினால் ஒரு தடவையாவது கைது செய்யப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையடுத்து அவரது விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக பொலீஸார் குறிப்பிட்ட மூதாட்டியை கைது செய்து பின்னர் விடுவித்துள்ளார்கள்.
இங்கிலாந்து பிறிஸ்டல் பகுதியில் கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயோதிபர்களை அவர்களது தனிமையிலிருந்து மனதளவில் விடுவிக்கும் முகமாக இங்கிலாந்தில் Bristol Wishing Washing Line என்ற தொண்டு அமைப்பு குறிப்பிட்ட வயோதிபர்களின் கடைசிக்கால ஆசைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி வருகிறது.
அந்த வகையில், Stokeleigh Care Home என்ற முதியோர் இல்லத்திலிருந்து Anne Brokenbrow என்ற 104 வயதான மூதாட்டி, தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு கூட்டிச்செல்லப்படவேண்டும் என்றும் அந்த அனுபவம் தனக்கு கிடைக்காமல்போனதையிட்டு தான் இன்றுவரைக்கும் கவலைகொள்வதாகவும் குறிப்பிட்ட தொண்டமைப்புக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்.
தனது 104 வருட கால வாழ்வில் எப்போதுமே நாட்டின் மிகநல்ல பிரஜையாக வாழ்ந்துவிட்டதாகவும் பொலீஸாரினால் கைது செய்யப்படுவதன் மூலம் சட்டத்தின் மறுபக்கத்தில் ஒரு தடவையாவது வாழ்ந்து அதனை அனுபவிக்கவேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மூதாட்டின் இந்த ஆசையினை பொலீஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, இங்கிலாந்தின் பிறிஸ்டல் பொலீஸார் குறிப்பிட்ட முதியோர் இல்லத்துக்கு சென்று, மிகவும் அன்போடும் பரிவோடும் மூதாட்டியின் கைகளில் விலங்கினை மாட்டி அவரை கைது செய்தார்கள். நாட்டின் நல்ல பிரஜையாக தொடர்ந்து வாழ்ந்தமைக்காக தாங்கள் அவரை கைது செய்வதாகவும் கூறினார்கள்.
மூதாட்டியை சக்கர நாற்காலியில் அழைத்துச்சென்று பொலீஸ் வாகனத்தில் ஏற்றி கூட்டிப்போகும்போது, பொலீஸ் வாகனத்தில் "சைரன்" ஒலி எழுப்புமாறும் அந்த மூதாட்டி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது விருப்பத்துக்கேற்ப சைரன் ஒலிக்கவிட்டபடி மூதாட்டியை கைது செய்து சென்றபின்னர் மீண்டும் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து இறக்கிவிட்டிருக்கிறார்கள்.
தனது விருப்பம் பூரணமாக நிறைவேற்றப்பட்ட பின்னர் Anne மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
