ஆஸ்திரேலியாவிற்கு விமானம் மூலம் வந்து புகலிடம்கோருவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் காரணமாக கடந்த ஆண்டு இறுதிவரையான தரவுகளின்படி சுமார் 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக காத்திருந்ததாக UNHCR அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகம் என ஐ.நா சபையின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் விமானம் மூலம் ஆஸ்திரேலியா வந்து புகலிடம்கோரியோரின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரம் எனவும் Peter Dutton-இன் நிர்வாகத்தின் கீழேயே அதிக அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறார்கள் எனவும் லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் Kristina Keneally அண்மையில் தெரிவித்திருந்த பின்னணியில் UNHCR அமைப்பின் இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.
இவ்வாறு விமானம் மூலம் வந்து புகலிடம்கோரியோரின் விண்ணப்பங்களில் 90 வீதமானவை நிராகரிக்கப்பட்டபோதும் அவற்றைப் பரிசீலிப்பதற்கு அதிக காலம் எடுப்பதுடன் தஞ்சக்கோரிக்கைக்கு விண்ணப்பித்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலைசெய்வதற்கேற்ற வகையில் bridging விசாவும் வழங்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் bridging விசாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 2014ம் ஆண்டு 107,000 ஆயிரமாக காணப்பட்ட அதேநேரம் இவ்வெண்ணிக்கை 2019ம் ஆண்டு 230,000 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தப்பின்னணியில் Peter Dutton-இன் கண்காணிப்பின் கீழேயே அதிக அகதிகள் வந்துள்ளார்கள் என்பதை UNHCR அமைப்பின் அறிக்கை நிரூபித்திருப்பதாக லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் Kristina Keneally தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிக விண்ணப்பங்கள் தேங்கியிருக்கின்றமையானது அதிக அகதிகள் நாட்டுக்குள் வந்துவிட்டார்கள் என்று அர்த்தப்படாது எனத் தெரிவித்துள்ள குடிவரவு அமைச்சர் David Coleman ஆஸ்திரேலியா மனிதாபிமான அடிப்படையில் ஆண்டொன்றுக்கு ஏற்றுக்கொள்ளும் அகதிகளின் எண்ணிக்கையை தாம் வரையறுத்துள்ளதாக பதிலளித்துள்ளார்.
Share
