மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பறப்புக்களை மேற்கொண்டு வந்த தனியார் விமானசேவையொன்றில் பணிபுரிந்தவர்களின் ஊடாக ஆஸ்திரேலியாவிற்குள் கடந்த ஐந்து வருடங்களாக போதைப்பொருட்களை கடத்திவந்த கும்பல் ஒன்றை கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பொலீஸார் தெரிவித்துள்ளனர் .
இந்தக்கடத்தல் கும்பல் இதுவரை சுமார் 20 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் மதிப்புள்ள போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்குள் கடத்திவந்துள்ளது என்று தெரிவித்துள்ள பொலீஸார், தாங்கள் கடந்த ஐந்து மாதங்களாக திட்டமிட்டு மேற்கொண்ட OPERATION SUNRISE என்ற நடவடிக்கையில் இந்தக்கும்பல் பிடிபட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து இயங்கும் Malindo Air என்ற இந்த தனியார் விமான சேவை மெல்பேர்ன் - சிட்னி நகரங்களுக்கு பறப்புக்களை மேற்கொள்வது வழக்கம் என்றும் இந்த விமான சேவையில் பணிபுரிபவர்கள் விமானத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் வைத்து கொண்டுவருகின்ற போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவிற்குள் வரும்போது தங்களது உடம்பிலும் உடமைகளிலும் வைத்து கடத்திவந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி பொலீஸார் இந்த விமானத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் உட்பட இருவரை மெல்பேர்ன் Tullamarine விமானநிலையத்தில் வைத்து கையும் களவுமாக போதைப்பொருட்களுடன் கைது செய்ததை தொடர்ந்து மேலும் ஆறுபேரை மெல்பேர்ன், Sunshine,Richmond, Southbank, Abbotsford பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் பின் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருளுடன் கையும் களவுமாக அகப்பட்ட ஒருவர் தான் ஆஸ்திரேலியாவுக்கு இவ்வாறு போதைப்பொருளை கடத்திவருவது இது இருபதாவது தடவை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஆஸ்திரேலிய குடியுரிமைகொண்ட வியட்னாமியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக பொலீஸார் கூறியுள்ளனர்.
