Qantas விமானநிறுவனம் ஊடாக உள்நாட்டுப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இனிமேல் அதிகநிறையுடைய பயணப்பொதியினை carry on luggage-ஆக விமானத்தினுள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.
தற்போதுள்ள நடைமுறையின்படி பயணி ஒருவர் தன்னுடன் 14 கிலோ எடையுள்ள பயணப்பொதியை carry on luggage- ஆக எடுத்துச்செல்லலாம் என்றபோதிலும் அதனை 7கிலோ எடையுள்ள இரு பயணப்பொதிகளாகவே கொண்டுசெல்லலாம். அதாவது ஆகக்கூடியது ஒரு பயணப்பொதியின் நிறை 7 கிலோவாக இருக்கவேண்டுமென மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் 25ம் திகதி முதல் விமானத்தினுள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும் carry on luggage ஒன்றின் நிறை 10கிலோவாக அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி பயணியொருவர் தன்னுடன் விமானத்தினுள் 10கிலோ எடையுள்ள ஒரு பொதியையும் 4 கிலோ எடையுள்ள மற்றுமொரு பொதியையும் எடுத்துச்செல்லலாம்.
இதுதொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள Qantas நிறுவனம் , நீண்டகாலமாக பயணிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இம்மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் பயணி ஒருவர் மொத்தமாக எடுத்துச்செல்லக்கூடிய carry on luggage எடையில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை என்றும் அது 14 கிலோவாகவே தொடர்ந்தும் பேணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் 10 கிலோவுக்கு அதிக எடையுள்ள பயணப்பொதியை கொண்டுவருபவர்கள் அதனை checked Baggage-ஆகவே எடுத்துச்செல்லலாம்.
