SKIP TO MAIN CONTENT

வெற்றிபெற்றால் முகாமை மூடுவதாக கூறி சர்ச்சையில் சிக்கியுள்ள பிரதமர்!

PM Scott Morrison at the Christmas Island detention centre
PM Scott Morrison says Labor's plan to take more refugees will end up costing taxpayers $6 billion. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகள் மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா கொண்டுவரப்படுவதைக் காரணம்காட்டி  மீளத்திறந்த கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்றால் மீண்டும் மூடுவதாக பிரதமர் Scott Morrison உறுதியளித்துள்ளார்.

மனிதாபிமான பிரச்சினையாக பரிசீலிக்கப்படவேண்டிய அகதிகள் விவகாரத்தை நாட்டின் பிரதமர் தனது கட்சியின் தேர்தல் துருப்புச்சீட்டாக பயன்படுத்துக்கிறார் என்றும் தேவையில்லாத அரசியல் அச்சமொன்றை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக குறிப்பிட்ட அகதிகள் முகாமினை மீளத்திறந்து கிட்டத்தட்ட 185 மில்லியன் டொலர்களை விரயம் செய்துவிட்டு இப்போது மீளவும் மூடுவதாக கூறுகிறார் என்றும் லேபர் கட்சி விமர்சித்திருக்கிறது.

அகதிகள் செயற்பாட்டாளர்களும் இதேகருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மனுஸ் - நவுறு தீவுகளிலுள்ள அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கான சட்டவரைவு நாடளுமன்றில் கடந்த பெப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டபோது, அங்கிருந்து வருபவர்களை தங்கவைப்பதற்காகவும், மேலும் புதிய அகதிகள் வரக்கூடும் என்ற அச்சத்தாலும் கிறிஸ்மஸ் தீவுகள் அகதிகள் முகாமை மீளத்திறப்பதாக பிரதமர் அறிவித்திருந்தார்.

லிபரல் கூட்டணி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வரவு-செலவு திட்டத்தில்கூட இந்த அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கான செலவு என்று 178.9 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக இந்த அகதிகள் தொடர்பான மருத்துவ சோதனைகள் என்றும் 8 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், கடந்த ஒரு மாத காலமாக கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாம் மீளத்திறந்த பின்னரும் எவருமே இல்லாமல் வெறுமனே கிடக்கிறது என்று லேபர் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. லேபர் கட்சித்தலைவர் Bill Shorten கூறும்போது - மீளத்திறந்த கிறிஸ்மஸ் தீவுகள் அகதிகள் முகாமினை ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அங்கு அழைத்துச்சென்று படமெடுத்துக்கொண்டதற்கு மாத்திரம் ஒரு நிமிடத்துக்கு 2000 டொலர்களை செலவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now