ஆஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் இந்தியாவுக்கு சென்ற நான்கு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட பின்னர் சடலமாக கால்வாயொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அவரது கணவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேநேரம் மற்றுமொரு பெண்ணும் சந்தேக நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast பகுதியை சேர்ந்த Ravneet Kaur என்ற 29 வயதான நான்கு மாத கர்ப்பிணிப்பெண் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தாயகம் சென்றுள்ளார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள Bagge Ke Pipal என்ற இடத்தில் வீதியில் நடந்துசென்றவாறு ஆஸ்திரேலியாவிலுள்ள தனது கணவரோடு காணொளி அழைப்பில் Ravneet Kaur பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று அங்கு விரைந்துவந்த வாகனத்திலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கடத்திச்சென்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவரது சடலம் 11 நாட்களின் பின் நேற்று முன்தினம் கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக டில்லியிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திடம் தகவல்களை தெரிவித்துள்ள பஞ்சாப் பொலீஸார் - சம்பவம் பட்டப்பகலில் 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கிறது என்றும் Ravneet Kaur கடத்திச்செல்லப்பட்ட அன்றே படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவரை தாங்கள் கைது செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் விசாரணைகளுக்காக ஆஸ்திரேலியாவிலுள்ள அவரது கணவரை பஞ்சாப் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கொலைசெய்யப்பட்ட Ravneet Kaur-இன் கணவருக்கு Gold Coast -இல் வாழும் வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும், Ravneet Kaur இந்தியா சென்ற சமயம் குறித்த Gold Coast பெண்ணும் இந்தியாவில் இருந்ததாகவும் கொலை நடைபெற்ற அடுத்த நாள் அப்பெண் ஆஸ்திரேலியா திரும்பியதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவரை SBS பஞ்சாபிக்கு தெரிவித்துள்ளார்.
குயின்ஸ்லாந்தில் தாதியாக பணிபுரிந்து வந்த Ravneet Kaur 4 வயது குழந்தையின் தாயார் ஆவார்.
