SKIP TO MAIN CONTENT

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது?

An undated picture taken at the Nauru Regional Processing Centre.
An undated picture taken at the Nauru Regional Processing Centre. Source: Department of Immigration

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகளில் 1200 பேர் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துவரும் நிலையில், அங்குள்ள தமிழ் அகதிகள் இதற்கு தகுதிபெறாமல் போகலாம் என குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் அடிப்படையில், குறித்த இரு இடங்களிலுமுள்ள 250 தமிழ் அகதிகளுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என ABC செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற 9-11 தாக்குதலுக்குப் பின்னர் அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்படி, ஆயுதக்குழு ஒன்றுக்கு உணவு, பணம், தங்குமிடம், பயிற்சி என எந்த வழியிலாவது உதவியிருந்தாலோ, அல்லது அந்த அமைப்புடன் சேர்ந்தியங்கியிருந்தாலோ அமெரிக்கா அவர்களை ஏற்றுக்கொள்ளாது.

அந்தவகையில்  நவுறு மற்றும் மனுஸிலுள்ள தமிழ் அகதிகளுக்கு ஏதோவொரு வகையில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு இருந்திருக்கலாம் என கருதப்படுவதால் அவர்களை குடியமர்த்துவதற்கு அமெரிக்கா மறுக்கக்கூடுமென குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக தமக்கு பல தகவல்கள் கிடைத்திருப்பதாக ஐ.நா அமைப்பின் சிறப்பு பிரதிநிதி Ben Emmerson அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் குறித்த தமிழ் அகதிகளுக்கு அமெரிக்கா அனுமதி மறுக்கும்பட்சத்தில் அவர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவில் குடியமர்த்தப்படாத அகதிகளுக்கு ஆஸ்திரேலியா என்ன மாற்று ஏற்பாடுகளை வைத்திருக்கிறது என்பது தொடர்பில்  கருத்துவெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் Julie Bishop, மூன்றாவது நாடொன்றில் இவர்களைக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் எடுக்கப்படுமெனவும், அம்முயற்சி வெற்றியளிக்காதபட்சத்தில் அவர்கள் பப்புவா நியூகினியில் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now