தனது விடுதலையை வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்புமுகாமில் உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்த ஈரானிய அகதி ஒருவர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
23 வயதான Omid Bagheri Jebeli என்ற இந்த ஈரானிய அகதி இளைஞனும் இவரது தாயாரும் சகோதரியும் விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அகதி இளைஞரின் தாயாரும் சகோதரியும் மாத்திரம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, தன்னை தனது தாயாருடனும் சகோதரியுடனும் சேர்ந்து வாழும் வகையில் முகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரி குறிப்பிட்ட இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்திருந்தார். இதையடுத்து எந்த ஆகாரமும் உட்கொள்ளாமல் உடல்நிலை மோசமடைந்த இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மருத்துவ வசதியளிக்கப்பட்டுவருகிறார்.
வைத்தியசாலையிலும் இவர் எந்த ஆகாரத்தையும் உட்கொள்ள மறுத்துவருவதால் நாசி வழியாக குழாய் பொருத்தி திரவ உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை நேரடியாக குடலுக்கு அனுப்பி உயிரைக்காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் போராடி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞர் மரணமடைவதைத் தடுப்பதற்காக வழங்கப்பட்டுவரும் மருத்துவ வசதிகளுக்காக இதுவரை 3 லட்சம் டொலர்களுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
