வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மெல்பேர்ன் - Mill Park பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குடும்பஸ்தரின் மகனுக்கு சொந்தமான இந்த நாய் வீட்டில் வளர்க்கப்பட்டுவந்ததாகவும் நேற்று திடீரென்று தாக்குதல் நடத்தியதில் மிக மோசமாக காயமடைந்த குறிப்பிட்ட நபர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது மனைவி அங்கு விரைந்து சென்ற பொலீஸாரின் உதவியுடன் வீட்டிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திவிட்டு பல மணிநேரமாக வீட்டுக்குள் உலவிக்கொண்டிருந்த நாயை பிடிப்பதற்கு விலங்குகள் கட்டுப்பாட்டுப்பிரிவினர் பொலீஸாரால் அழைக்கப்பட்டதையடுத்து, அங்கு உடனடியாக விரைந்த சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் நாயை பிடித்துச்சென்றதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 6.40 மணியளவில் குறிப்பிட்ட சம்பவத்தில் உயிழந்தவரின் சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டபோதும் இரவு 10.30 மணியளவிலேயே தாக்குதல் நடத்திய நாயை பிடிக்கக்கூடியதாக இருந்ததாக பொலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
வளர்ப்பு நாயான இந்த American Staffordshire Terrier முன்னெப்போதும் இதுபோன்று அசாதாரணமாக நடந்துகொண்டதாக தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் தாக்குதலை அடுத்து இந்த நாயை கொன்றுவிடுவதற்கு உயிரிழந்தவரின் மருமகளும் நாய் உரிமையாளரின் மனைவியுமானவர் அனுமதி வழங்கியிருப்பதையடுத்து, நாயை பிடித்துச்சென்றவர்கள் அந்தப்பணியை நிறைவேற்றவுள்ளார்கள் என்றும் பொலீஸார் உறுதி செய்துள்ளார்கள்.
