இவ்வாண்டுக்கான Tax return-ஐ பலரும் செய்து முடித்திருப்போம். Tax return-இல் வரவுகளைக் குறைவாகவும் செலவுகளை அதிகமாகவும் காட்டியோ அல்லது வேறு பொய்களைச் சொல்லியோ வரி ஏய்ப்புச் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கு Facebook, Instagram உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை வரித்திணைக்களம் பயன்படுத்துகின்றது.
Tax return படிவங்களில் நீங்கள் சமர்ப்பித்த தரவுகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தகவல்களும் ஒன்றுடனொன்று பொருந்துகின்றனவா என்பதை வரித்திணைக்களம் கண்காணிக்கின்றது.
இதற்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட நபர்கள் இப்பணியினை மேற்கொள்கின்றனர். குறிப்பாக வரி ஏய்ப்புச் செய்திருக்கலாம் என்ற சந்தேக வட்டத்தினுள் இருப்பவர்கள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர்.
உதாரணமாக கணவன் மனைவி இருவரும் தமது மொத்தவருமானம் 140,000 டொலர்கள் என வரித்திணைக்களத்திடம் தெரிவித்திருந்தனர். ஆனால் இத்தம்பதி தமது 3 பிள்ளைகளுடன் 5 தடவைகள் விமானத்தின் Business Class-இல் விடுமுறையில் சென்றிருக்கிறார்கள் என்பதை அவர்களது Facebook ஊடாக வரித்திணைக்களம் கண்டுபிடித்துவிட்டது.
அதேபோல் வேலையில்லாமல் இருப்பதாக தெரிவித்த ஒருவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தனது Online வர்த்தகத்தை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்ததையும் வரித்திணைக்களம் கண்டறிந்து விட்டது.
இப்படியாக பலர் தமது ஆடம்பர வாழ்க்கை, வரித்திணைக்களத்திற்குத் தெரியாமல் செய்யும் வியாபார நடவடிக்கைகள் மற்றும் அதிக செலவுகளுடனான உல்லாசப் பயணங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதன்மூலம் மாட்டிக்கொள்கின்றனர்.
சமூகவலைத்தளங்கள் மட்டுமல்லாமல் eBay, நிதி நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், பங்குச்சந்தை, வேலை பார்க்குமிடம் என பல தரப்புக்களிலிருந்தும் வரித்திணைக்களம் தகவல்களைத் திரட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share