புதுவருடப்பிறப்பன்று மெல்பேர்ன் நகரில் வெடிக்கவுள்ள வாண வேடிக்கைகள் உலகின் வேறெங்கிலும் காணாதளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ன் நகரிலுள்ள 22 கட்டடங்களிலிருந்து சுமார் 14 தொன் எடையுள்ள பட்டாசுகளையும் வாண வேடிக்கைகளையும் வானில் ஏவி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போவதாக நிகழ்வு ஒருங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மெல்பேர்ன் நகரின் மையத்திலிருந்து ஏழு கிலோமீற்றர் சுற்றளவிலுள்ள ஒட்டுமொத்த வான்பரப்பும் அன்றிரவு ஒளிவெள்ளத்தில் மிதக்கும் என்கிறார்கள் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள்.
2019 ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக நள்ளிரவு 12 மணிமுதல் 10 நிமிடங்களுக்கு வானில் ஜாலம் நிகழ்த்தவுள்ள இந்த வேடிக்கை நிகழ்வுக்கும் பட்டாசுகளுக்கும் இரண்டு லட்சத்து 34 ஆயிரம் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவருடப்பிறப்பன்று - எதிர்வரும் திங்களன்று - இரவு இந்த வாண வேடிக்கைகளை பார்ப்பதற்கு மெல்பேர்ன் நகருக்கு சமார் மூன்றரை லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய இரவை பாதுகாப்புடன் மக்கள் களிப்பதற்கு நகரின் பாதுகாப்பு உச்சநிலையிலிருக்கும் என்று விக்டோரிய பிரதமர் தெரிவித்துள்ளார். அன்றைய இரவு பாதுகாப்புக்கு மாத்திரம் சுமார் 34 லட்சம் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். வழமையான நகரப்பாதுகாப்பைவிட, பொலீஸாரின் கண்காணிப்பு முப்பது மடங்குகளால் அதிகரிக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவருட இரவன்று மாத்திரம் நகரெங்கும் திறக்கப்படவுள்ள கடைகளின் வருமானத்தினால் கிட்டத்தட்ட 86 லட்சம் டொலர்கள்வரை இலாபல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
