SKIP TO MAIN CONTENT

வரவுசெலவுத் திட்டம் 2017 - கல்வி பற்றிய மாற்றங்களில் சில

ஆஸ்திரேலிய வரவு செலவுத் திட்டத்தை, கருவூலக்காப்பாளர் Scot Morrison நேற்றிரவு 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

cc
Minister for Training and Education Simon Birmingham addresses the National Press Club in Canberra. Source: AAP Image/Sean Davey

2 min read

Published

By Praba Maheswaran


Skip to article content

Funding for schools will increase by $18.6 billion over the next decade

Gonski கட்டமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் அதேவேளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு பணவீக்கத்துக்கு ஏற்றாற்போல் பாடசாலைகள் சுமார் $18.6 பில்லியன் டொலர்கள் பெறவுள்ளன. இதேவேளை பாடசாலைகளுக்கு வழங்கப்படும் நிதி தரநிர்ணயம் செய்யப்படும்.

கன்பரா மற்றும் North Sydney யிலுள்ள 24 பாடசாலைகளுக்கு, அவற்றின் வருமானம் அதிகரித்துக் காணப்படுவதினால் (Schooling Resource Standard (SRS) நிதி குறைக்கப்படவுள்ளது.

தனியார் பாடசாலைகள் அரசாங்கத்தின் சீர்திருத்த செயற்பட்டியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அடுத்த 5 ஆண்டுகளில் $125 மில்லியன் பெறவுள்ளன.

பின்தங்கியதாகக் கருதப்படுகிற மாணவர்கள் கூடுதல் நிதி பெறவுள்ளார்கள். பிராந்திய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, மாணவர் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு தலா 5% படி நிதி வழங்கப்படவுள்ளது. இதேவேளை சராசரியாக தேசிய ரீதியில் மாணவர் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு தலா 4.1% படி நிதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Northern Territory பிராந்தியத்துக்கு மேலதிக நிதி வழங்கப்படுகிறது. மற்றும் பழங்குடியினர் பற்றிய கல்விக்கும் அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகக் கட்டணங்கள் அதிகரிப்பு

பல்கலைக்கழகக் கற்கைகளுக்கான கட்டணங்களின், மாணவர்களின் பங்களிப்பு வருடாந்தம் 1.8% இனால் அதிகரிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டுமுதல் 2021ம் ஆண்டுவரை நிகழவுள்ள இந்த அதிகரிப்பினால் மாணவர்களின் உயர் படிப்புக்கான மொத்த கட்டணம் 7.5% இனால் கூடவுள்ளது. இதன்படி மாணவர்கள் சராசரியாக தங்கள் பட்டப்படிப்பின் கட்டணத்தின் 42% க்கு பதிலாக இனிமேல் 46% செலுத்த வேண்டும். சாதாரண 4 வருடப் பட்டப்படிப்புக்கு ஒருவர் ஆகக்கூடியது $50,000 செலுத்தவேண்டும். 6 வருட மருத்துவப் பட்டப்படிப்புக்கு ஆகக்கூடிய தொகையாக $75,000 வரை செலுத்தவேண்டிவரும்.

இதேவேளை, HECS-HELP கடன் பெற்றவர்கள் தமது கடன்களை மீள் அளிப்பதற்கான மிக்க குறைந்த வருடாந்த வருமானம் $55,000 இலிருந்து $42,000 ஆகக் குறைக்கப்படுகிறது.

அத்துடன் பல்கலைக்கழகங்களுக்கான கொடுப்பனவை அரசு 2.5% வீதத்தினால் அல்லது $2.9 பில்லியனால் அடுத்த 2 வருடங்களுக்கு குறைக்கின்றது.

Permanent Residency உள்ளவர்கள் கல்விகற்க இனி சலுகை இல்லை!

நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழும் உரிமை எனப்படும் Permanent Residency – எனும் விசாவில் வந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வேண்டுமானால் அவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம் போன்று முழுக் கட்டணமும் செலுத்தவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

தற்போது பல்கலைக்கழகங்களின் படிப்புச் செலவுக்கு அரசு மானியம் அல்லது நிதி உதவி செய்கிறது. ஆனால் நாட்டில் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே அரசு அவர்களின் கல்விக்கு கட்டண சலுகை வழங்கும் என்றும் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழும் உரிமை எனப்படும் Permanent Residency பெற்று இங்கு வாழ்கின்றவர்கள் அவர்களுக்கான முழுக் கல்விக் கட்டணத்தை அவர்களே செலுத்தவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை New Zealand குடியுரிமை பெற்று ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றவர்களுக்கும் பொருந்தும் என்றும் அரசு அறிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now