வட அயர்லாந்து போராளிகளுக்கும் பொலீஸாருக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதலில் அகப்பட்டு ஊடகவியலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்து போராளிகள் குழுவினரின் துப்பாக்கிச்சூட்டிலேயே குறிப்பிட்ட ஊடகவியலாளர் கொல்லப்பட்டார் என்று வட அயர்லாந்து பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
1998 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பெரிய வெள்ளி அமைதி ஒப்பந்தத்தினை எதிர்த்து அந்த ஒப்பந்தத்தின் 21 ஆவது ஆண்டின் நிறைவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்துவதற்கு வட அயர்லாந்து பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். Londonderry பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் வட அயர்லாந்து போராளிகள் குழுவினருக்கும் பொலீஸாருக்கும் இடையில் தாக்குதலாக மாறியபோது அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த Lyra McKee (வயது 29) துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து பொலீஸாரின் வாகனத்துக்கு அருகில் விழுந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதும் அங்கு அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
2006 ஆம் ஆண்டு Sk News ஊடகநிறுவனத்தின் இளைய ஊடகவியலாளர் விருது பெற்ற Lyra McKee பல்வேறு நூல்களை எழுதியவர். வட அயர்லாந்து போராட்டத்தின்போது காணாமல்போன இளையவர்கள் குறித்து உண்மைகளை வெளிக்கொண்டுவரும் படைப்புக்களை தொடர்ந்து எழுதிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
