நியூசிலாந்து நாட்டை உலுக்கிய படுகொலைகளில் ஒன்றான 16 வயது Amber-Rose Rush மரணம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட வினோத் ஸ்கந்தா என்ற 33 வயது மருத்துவர், நேற்று சிறையில் மரணமடைந்துள்ளதாக stuff செய்தி வெளியிட்டுள்ளது..
இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய பின்னணி கொண்ட வினோத் ஸ்கந்தா பெரும் எண்ணிக்கையிலான பெண்களோடு தொடர்புடையவர் எனவும் சிறுமிகளுக்கு போதைப்பொருட்களையும் மதுவையும் வழங்கி அவர்களை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்திவந்தார் என்றும் கூறப்படுகிறது.
இவர் Amber-Rose Rush என்ற 16 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதையடுத்து அச்சிறுமி வினோத்துக்கு எதிராக முறைப்பாடு செய்ய முயற்சித்திருக்கிறார். இதனை அறிந்த வினோத், 16 வயது சிறுவன் ஒருவனது உதவியுடன் படுகொலையை செய்துமுடித்தார் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நியூசிலாந்தின் Dunedin பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மிகுந்த மர்மமான முறையில் இடம்பெற்ற இம்மரணம் தொடர்பில் கொலையாளியை கண்டுபிடிப்பதில் பொலீஸார் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது.
ஏனெனில், கொலையுண்ட சிறுமியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்து, அவரது தாயாரை சந்தித்துப்பேசிய வினோத் ஸ்கந்தா, கொலைக்கான காரணங்களாக வேறு பல தகவல்களை தாயிடம் கூறிச்சென்றதாகவும் விசாரணைகளில் பின்னர் தெரியவந்தது.
ஆனால், கொலை நடைபெற்ற இடத்திலிருந்த இரத்தக்கறை, Amber-Rose வீட்டை நோக்கி வந்த வினோத்தின் கார் ஆகியவற்றை வைத்து, வினோத்தை பொலீஸார் கைது செய்தனர்.
வினோத் குற்றத்தை மறைத்தார். ஆனால், இக்கொலைக்கு உதவிய 16 வயதுச் சிறுவன் அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து 2020 ஆம் ஆண்டு வினோத் ஸ்கந்தாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நியூசிலாந்து நீதிமன்றம்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்த வினோத் ஸ்கந்தாவின் வழக்கு நேற்றுமுன்தினம் ஏப்ரல் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில், அவரது மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் இடம்பெற்று அடுத்தநாள், வினோத் ஸ்கந்தா சிறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
Readers seeking support and information about suicide prevention can contact Lifeline on 13 11 14, Suicide Call Back Service on 1300 659 467
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
