ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் Skilled மற்றும் Business Migration Program ஊடாக குடியேற விரும்புபவர்கள் அதற்கான nomination applications-பரிந்துரை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல், கட்டுமானத்துறை மற்றும் தாதியியல் துறைகளில் விண்ணப்பிக்க விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் சிறப்பு விதிகளின் கீழ் பரிசீலிக்கப்படும் எனவும், ஏனைய துறைக்கான விண்ணப்பங்கள் வழமையான முறையில் பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்திற்கான occupation list-தொழிற்பட்டியலில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இதேவேளை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Skilled மற்றும் Business Migration Program ஊடாக குடியேற விரும்புபவர்களும் அதற்கான பரிந்துரை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய முடியும். எனினும் குயின்ஸ்லாந்து மாநில தொழிற்பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம் Skilled Migration ஊடாக ஆஸ்திரேலியாவில் ஒருவர் புதிதாய் குடியேற 60 புள்ளிகள் எடுத்தால் போதுமானது என்று இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல், இது 65 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளமையை இரு மாநிலங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
இவ்வாறு விண்ணப்பங்களைத் தாக்கல் செய்பவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு தகுதியானவர்கள் என்று மாநில அரசுக்களால் பரிந்துரைக்கப்படும்பட்சத்தில், குறித்த நபர்கள் இங்கு குடியேறுவதற்கான தமது விசா விண்ணப்பங்களைத்தைத் தாக்கல் செய்ய முடியும் என்பதுடன், இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டமைக்காக கூடுதல் புள்ளிகளும் அவர்களுக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.