SKIP TO MAIN CONTENT

பலியெடுக்கும் கடும் வெயில்! அடுத்துவரும் நாட்களில் காத்திருக்கும் ஆபத்து!

Heatwave
Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

வரலாறு காணாத கொடிய வெப்ப காலப்பகுதியை எதிர்நோக்கியுள்ள விக்டோரிய மாநிலத்தில் இம்முறை ஏற்படப்போகும் பாதிப்புக்கள் மிகப்பயங்கரமானவையாக இருக்கப்போகின்றன என்றும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொள்ளக்கூடிய வெப்பநிலை மாநிலத்தில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தப்போகிறது என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த கொடிய காலநிலையினால் ஏற்படப்போகும் பாதிப்புக்களிலிருந்து தப்புவதற்கு முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விக்டோரிய அரசு மேற்கொண்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு சனிக்கிழமை எனப்படும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய வெப்பத்தையும்விட இம்முறை பாரதூரமான அழிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு என்றும், மாநிலமெங்கும் மின்வெட்டுக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்கள் தடைப்பட்டு மாநிலத்தின் பொருளாதாரம் முடக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, ஏற்கனவே காட்டுத்தீ அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள நியூ சவுத் வேல்ஸிலும் குயின்ஸ்லாந்திலும்கூட பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய அனல்காற்றும் காட்டுத்தீயும் ஏற்படப்போவதாக காலநிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பெருந்தொகையான பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எல்லா பகுதிகளுக்கும் அறிவிப்புக்களை நேர்த்தியாக வழங்கிக்கொண்டிருக்கமுடியாத சூழ்நிலை காணப்படுவதால், பொதுவான அறிவித்தல்களை பின்பற்றி மக்கள் தங்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நியூ சவுத் வேல்ஸ் மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

அவசர சேவைப்பிரிவுகள் உடனடி நடவடிக்கைகளுக்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் ஏற்படக்கூடிய பேரழிவுகளை தடுப்பதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அனைத்து சேவையினரும் தயார்நிலையில் உள்ளனர் என்று அவசர சேவைகள் பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நாற்பது டிகிரிக்கு மேல் வெப்பநிலை தொடர்ந்தாலோ அல்லது கடும் வெப்பத்தால் பல உயிர்கள் கொல்லப்படும் சூழ்நிலை ஏற்பட்டாலோ அந்த சூழ்நிலைக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதற்கான பயிற்சி அவசர சேவைப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத்தீ அபாயம் உள்ள பகுதிகளில் வாழ்பவர்கள் தங்களை நெருங்கும் தீ ஆபத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள – RFS என்ற app-செயலியை ஸ்மார்ட் கைத்தொலைபேசிககளில் தரவிறக்கம் செய்து தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now