கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு முற்றாக தடைசெய்யப்பட்ட மெல்பேர்ன் சர்வதேச விமானநிலையம் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது.
விக்டோரிய அரசாங்கத்தின் உச்சக்கட்ட பாதுகாப்பு முன்னாயத்தங்களுடன் திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் வழியாக முதற்கட்டமாக, நாடு திரும்ப முடியாமல் இவ்வளவு காலமும் சிக்கியிருந்த 125 ஆஸ்திரேலியர்கள் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, டோஹா, ஹொங்கொங் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு சேவையும் சிங்கப்பூரிலிருந்து இரண்டு விமானசேவைகளிலும் பயணிகள் முதற்கட்டமாக மெல்பேர்னில் வந்து இறங்கவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மெல்பேர்ன் நகர் புறத்திலுள்ள ஹோட்டலுக்கு விசேட பேரூந்து மூலம் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு மருத்துவ ரீதியான தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த காலங்களில் தனிமைப்படுத்தல் பொறிமுறையில் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற தவறுகள் - சிக்கல்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, இம்முறை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைக்கு உச்சக்கவனம் செலுத்தப்படும் என்று விக்டோரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தலுக்கான 14 நாட்கள் தங்குமிட செலவு தலா 3500 டொலர்கள் - ஏனைய மாநிலங்களில் நடைமுறையிலுள்ளதுபோல - பயணிகளே செலுத்தவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலப்பகுதியில், உடற்பயிற்சிக்கான அனுமதியோ காற்று வாங்குவதற்கான அனுமதியோ முற்றாக மறுக்கப்படும் என்றும் ஹோட்டலில் எவருடனும் மிகத்தேவையான தொடர்புகள் மாத்திரம் உரிய பாதுகாப்புடன் மாத்திரம் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கான பாதுகாப்பு பணி மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்காக மெல்பேர்ன் விமானநிலையத்திலிருந்து ஹோட்டல்கள்வரை சுமார் முன்னூறு பொலீஸாரும் 220 பாதுகாப்பு படையினரும் விசேட பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
