NSW-விக்டோரியா இடையிலான எல்லை 101 வருடங்களின் பின்னர் நாளை செவ்வாய் இரவு 11.59 மணியிலிருந்து தற்காலிகமாக மூடப்படுகிறது.
விக்டோரியில் கடந்த 24 மணிநேரத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 127 என்ற இலக்கத்தை எட்டியிருப்பதையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறது.
விக்டோரியாவில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் உச்சத்தை எட்டியிருப்பதை அடுத்து இரண்டு மாநில முதல்வர்களும் இணைந்து நடத்திய பேச்சினை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் நான்கு பெரிய road crossings, 33 பாலங்கள், இரண்டு waterway crossings, பல சிறுதெருக்கள், சகதிகள் நிறைந்த சிறுவழிகள் மற்றும் காட்டுப்பாதை தொடர்புகள் உள்ளன.
இந்த எல்லைகளின் வழியாக யாரும் நுழைந்துவிடாமல் நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலீஸார், இராணுவத்தினர் ஆகியோர் வீதித்தடைகளைப்போட்டு காவல்பணியில் ஈடுபடுவது மாத்திமன்றி ட்ரோன் வழியான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களினதும் எல்லைகளில் வசிப்பவர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வதற்கு சென்றுவருவதற்காக விசேட அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1919 ஆம் ஆண்டு உலகளவில் பரவிய Spanish flu தொற்றுநோய்காலத்தில் அந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் ஏப்ரல் மாதத்துக்கும் இடையில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலான எல்லைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
