விக்டோரிய மாநிலத்தில் தனிமைப்படுத்தல் விடுதி ஊடாக கோவிட் பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்கள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 11.59 முதல் நடைமுறைக்கு வரும் Stage 4 முடக்கநிலையின்படி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற, உடற்பயிற்சி மற்றும் வேலை(வீட்டிலிருந்து வேலைசெய்ய முடியாதபட்சத்தில் மட்டும்) ஆகிய நான்கு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
வீடுகளுக்கு விருந்தினர்கள் வர அனுமதியில்லை. பொது இடங்களில் ஒன்றுகூட முடியாது.
வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டருக்கு உட்பட்ட இடங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய முடியும்.
மேலும் மக்கள் அனைத்து இடங்களிலும்(சொந்த வீடு தவிர) முகக்கவசம் அணிய வேண்டும்.
வழிபாட்டிடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பாடசாலைகள், கல்விக்கூடங்கள், உணவகங்கள்(take away மட்டும் அனுமதி) உட்பட பலவும் மூடப்படுகின்றன.
இவைதவிர மாநிலத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
விக்டோரிய மாநிலத்தின் தனிமைப்படுத்தல் மையங்களில் ஒன்றான Melbourne Airport Holiday Inn ஹோட்டலில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
