விக்டோரியாவின் Shepperton பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போயிருந்த இந்தியப் பின்னணி கொண்ட இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
27 வயதான Simranjeet Singh Bhullar என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 30ம் திகதிமுதல் காணாமல் போயிருந்த குறித்த இளைஞரின் கார், கைவிடப்பட்ட நிலையில் மே 3ம் திகதி Katamatite பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், கார் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலிருந்து அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
இம்மரணம் சந்தேகத்திற்கிடமான ஒன்றாக பார்க்கப்படவில்லை என தெரிவித்துள்ள விக்டோரியா பொலிஸார், மரணவிசாரணை அதிகாரி இதுகுறித்த அறிக்கையைத் தயார் செய்வதாக கூறியுள்ளனர்.
எனினும் தமது மகனைக் கண்டுபிடிப்பதில் விக்டோரியா பொலிஸார் உரியமுறையில் செயற்படவில்லை என Simranjeet-இன் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கார் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு மிக அருகிலிருந்தும், தமது மகனின் உடலை மீட்க முடியாத அளவிலேதான் பொலிஸாரின் தேடுதல் வல்லமை காணப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள Simranjeet-இன் குடும்பத்தினர், தமது ஒரேயொரு மகனின் மரணம் தொடர்பிலான முழுமையான விபரங்கள் வெளிக்கொண்டுவரப்படவேண்டுமென கோரியுள்ளனர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா வந்த Simranjeet-இன் உடலை இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Readers seeking support can contact Lifeline on 13 11 14 or Beyond Blue on 1300 22 4636.
