விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள அதேநேரம் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
90 வயதுகளிலுள்ள மூதாட்டி ஒருவரே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக விக்டோரியாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் ஆஸ்திரேலியா முழுவதும் 111 ஆகவும் அதிகரித்துள்ளது.
விக்டோரியா மாநிலம் முழுவதும் தற்போது 1931 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 105 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விக்டோரியாவில் கொரோனா தொற்றின்வேகம் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்லும்பட்சத்தில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில Premier Daniel Andrews எச்சரித்துள்ளார்.
இதேவேளை கொரோனா கட்டுப்பாடுகளை பலர் மதிக்காமல் நடந்துகொள்வதாக கூறியுள்ள விக்டோரிய பொலிஸின் துணை ஆணையர் Rick Nugent கடந்த வாரம் மாத்திரம் கட்டுப்பாடுகளை மீறிய 351 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
