விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 466 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ள அதேநேரம் 12 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் 6 பேர் முதியோர் இல்லங்களில் ஏற்பட்ட பரவலுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
30 வயதுகளிலுள்ள ஆண், 70 வயதுகளிலுள்ள 2 ஆண்கள், 80 வயதுகளிலுள்ள 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள், 90 வயதுகளிலுள்ள 4 பெண்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1000 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள் என குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம் தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 44 பேர் உட்பட 636 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
விக்டோரியாவில் தொடர்ந்து 34வது நாளாக மூன்று இலக்கங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் பலருக்கு தொடர்ந்தும் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதிகாலை 1 மணியளவில் சிகரெட் மற்றும் lollies வாங்குவதற்கு பெற்றோல் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவருக்கு ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 1652 டொலர்களும் முகக்கவசம் அணியாதமைக்கு 200 டொலர்களும் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய சுமார் 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 4 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட தொற்றுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் இருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய மூவருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
