விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 484 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதன் பின்னர் ஒரேநாளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆகவும் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆகவும் உயர்ந்துள்ளது.
முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பரவலுடன் தொடர்புடைய, 90 வயதுகளிலுள்ள இரு முதியவர்களே இவ்வாறு மரணமடைந்ததாக மாநில Premier Daniel Andrews இன்று அறிவித்தார்.
விக்டோரியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, கொரோனா தொற்று ஏற்பட்ட பலர் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளாதமையே என Daniel Andrews கூறினார்.
இதேவேளை இன்று புதன்கிழமை இரவு 11.59 முதல் மெல்பேர்ன் மற்றும் Mitchell Shire ஆகிய பகுதிகளில் வாழ்பவர்கள் வீட்டிற்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
