விக்டோரிய மாநிலத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அரசாங்கம் மேற்கொண்டுவரும் தற்போதைய நோய்த்தடுப்பு நடடிக்கைகள் உரிய வகையில் பலன்தராவிட்டால், மாநிலம் தழுவிய lock down -கட்டுப்பாட்டினை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டிவரும் என்று Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விக்டோரியாவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றினால் பேரச்சத்துக்கு உள்ளாகியுள்ள ஏனைய மாநிலங்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ளும்பொருட்டு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்கள்.
விக்டோரியாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து எவரும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்கு வருவது தடைசெய்யப்படவுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை மீறி யாராவது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்குள் நுழைந்தால், அவர்களுக்கு 11 ஆயிரம் டொலர்கள் தண்டப்பணம் அல்லது ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலமும் விக்டோரியா மாநிலத்திற்கான இதேபோன்ற கடுமையான கட்டுப்பாட்டினை அறிவித்திருக்கிறது.
விக்டோரியா தவிர ஏனைய மாநிலத்தவர்களுக்காக எதிர்வரும் 10 திகதி முதல் எல்லைகளை திறப்பதாக குயின்ஸ்லாந்து அரசு அறிவித்துள்ளது. எனினும் பயணத்திற்கான அனுமதிகளை இணையத்தில் விண்ணப்பித்துப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து அரசு இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் விக்டோரியா மாநிலத்திற்கு பயணம் செய்தவர்களாக இருக்ககூடாது(14 நாட்களுக்குள்) எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இணையத்தில் பொய்யான விவரங்களை கொடுப்பவர்களுக்கு நாலாயிரம் டொலர் தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
