விக்டோரியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து மெல்பேர்ன் மற்றும் Mitchell Shire பகுதிகளில் stage 3 கட்டுப்பாடு நடைமுறைக்குவந்துள்ள நிலையில், இன்று புதிதாக 165 பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்றுடன் நான்காவது நாளாக நூற்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் COVID-19 தொற்றுகண்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 3098 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை கடந்த 5 நாட்களாக முழுமையான முடக்கத்துக்கு உள்ளான North Melbourne, Flemington பகுதிகளிலுள்ள 9 அரச அடுக்குமாடி வீட்டுத்திட்டங்களில் ஒன்றைத் தவிர ஏனைய 8 வீட்டுத்திட்டங்களிலும் முடக்கநிலை சற்றுத் தளர்த்தப்பட்டு stage 3 கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்படி North Melbourne-இல் 9 Pampas Street ,159 Melrose St ஆகிய முகவரியிலுள்ளவர்களுக்கு இன்று பிற்பகல் 5 மணியிலிருந்து முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளது. இங்கு எவருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
ஏனைய 6 கட்டடத்தொகுதியிலுள்ளவர்களுக்கு இன்று இரவு 11.59 மணியிலிருந்து கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.
அதேநேரம் 33 Alfred Street, North Melbourne என்ற முகவரியிலுள்ள குடியிருப்பு மாத்திரம் தொடர்ந்தும் அடுத்த 9 நாட்களுக்கு முழுமையான முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டடத்தொகுதியில் 53 பேருக்கு COVID-19 தொற்று கண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
