விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 216 பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள அதேநேரம் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது.
COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த தொண்ணூறு வயதுகளிலுள்ள ஆண் ஒருவரே நேற்றிரவு மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை விக்டோரியா மாநிலம் முழுவதும் சுமார் 100 இடங்களில் இனங்காணப்பட்டுள்ள வைரஸ் பரவலைத் தடுத்துநிறுத்துவதற்கு சுகாதாரத்துறை தொடர்ந்தும் போராடி வருகிறது.
தற்போது மாநிலம் முழுவதும் 1249 பேர் COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம் இவர்களில் 49 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் அதிதீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இதேவேளை மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதையடுத்து அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் சமூக இடைவெளியைப் பேணமுடியாதவிடத்து முகக்கவசங்களை அணிந்துகொள்ளலாம் என ஊக்குவிக்கப்படுகிறது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
