விக்டோரியா மாநிலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 108 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் Flemington மற்றும் North Melbourne ஆகிய பகுதிகளிலுள்ள அடுக்குமாடிக்குடியிருப்புக்களில்(public housing towers) வசிக்கும் 23 பேரும் அடங்குகின்றனர்.
இதையடுத்து குறித்த இரு பகுதிகளிலுள்ள 9 அடுக்குமாடி கட்டடங்களிலுள்ளவர்கள் எக்காரணங்களை முன்னிட்டும் வெளியே செல்லமுடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Flemington : 12 Holland Court, 120 Racecourse Road, 126 Racecourse Road,130 Racecourse Road.
North Melbourne: 12 Sutton Street, 33 Alfred Street, 76 Canning Street, 159 Melrose Street, 9 Pampas Street
ஆகிய கட்டடத்தொகுதிகளில் வாழ்பவர்களுக்கே இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 9 அடுக்குமாடிகளிலுமுள்ள 1345 குடியிருப்புக்களில் பெரியவர்கள் சிறுவர்கள் என சுமார் மூவாயிரம் பேர் வாழ்கின்றனர்.
இன்று இரவு 11.59 மணிக்கு நடைமுறைக்கு வரும் இக்கட்டுப்பாடு அடுத்த 5 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டடங்களில் உள்ளவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் வகையிலான கண்காணிப்பு பணிகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த கட்டடங்கள் அமைந்திருக்கும் 3031, 3051 ஆகிய Postcodes-இலுள்ள Flemington, Kensington, மற்றும் North Melbourne ஆகியன, ஏற்கனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 36 suburbs-உடன் சேர்க்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
